தமிழர் படுகொலையைக் கண்டித்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீர் போராட்டம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரால் ஒரே நாளில் பல நூறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீரென போராட்டம் நடத்தினர்.


பிரான்சின் வெளிநாட்டமைச்சகம் அமைந்துள்ள அன்வலித் (Invalid), மற்றும் தமிழர்களின் வணிக மையமான லாச்சப்பல் ஆகிய பகுதிகளில் தன்னெழுச்சியாகத் திரண்ட தமிழர்கள் தம் உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிக்காட்டும் வகையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பிரான்சின் வெளிநாட்டமைச்சகம் அமைந்துள்ள அன்வலித் (Invalid) பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் திடீரென புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடினர்.

செய்தி அறிந்த பிரெஞ்சு காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களை அப்பகுதியில் இருந்து விலகிச் செல்லுமாறு வலியுறுத்தினர். அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த தமிழ் மக்கள் குறிப்பிட்ட நேரம் வரை தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று அப்பகுதியில் இருந்து கலைந்து சென்ற மக்கள், பின்னர் தமிழர்கள் செறிவாக கூடுகின்ற வணிக மையமான பாரிசின் லாச்சப்பல் பகுதியிலும் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு தாயக உறவுகள் மீதான தாக்குதல்களை கண்டித்துக் குரல் எழுப்பியுள்ளனர்.

முதலில் நூற்றுக்கணக்கில் திரண்ட மக்களின் உணர்வுடன் புதிதாக வந்து சேர்ந்தோரும் இணையத் தொடங்கியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளத் தொடங்கினர். மக்களின் உணர்வெழுச்சிக்கு ஆதரவளித்து வணிக நிலையத்தாரும் கதவுகளை மூடிக்கொண்டனர்.

மக்களின் உணர்வுக் கொந்தளிப்பு வீதி மறியல் போராட்டமாக வடிவம் எடுத்தது. ஏறத்தாழ நான்கு மணிநேரம் மக்கள் லாச்சப்பலின் பிரதான வீதியில் அமர்ந்து மறியில் போராட்டத்தை நடத்தினர்.

காவல்துறையினரின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மிக நீண்டநேரம் நடாத்தப்பட்ட இப்போராட்டம் வெளிநாட்டவர்கள் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

இதனிடையே, இன்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாரிஸ் நகரத்தில் உள்ள Avenue Friedland பகுதியில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக கண்டன ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது எனவும் அனைவரையும் ஒன்று கூடுமாறும் ஏற்பாட்டார்ளகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.