நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் 300-க்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7:30 நிமிடம் முதல் 10:00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் திரண்டிருந்தனர்.

சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையை நோர்வே பகிரங்கமாகக் கண்டிப்பதோடு, போரை நிறுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நோர்வே வெளியுறவு அமைச்சகம் நோர்வே தமிழ் மக்களின் கோரிக்கைக்குரிய உடனடி பதிலை தரும் வரை அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதியோடு வெளியுறுவு அமைச்சகத்தின் முன்பாக நின்றிருந்தனர்.

மக்களின் இக்கோரிக்கையை அடுத்து, மக்கள் முன் வருகை தந்த இலங்கைக்கான சிறப்பு சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர்,

சிறிலங்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போர் பொதுமக்களுக்கு பேரவலத்தை ஏற்படுத்துகின்றது. இந்த போர் முன்னெடுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை நோர்வே கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

கவனயீர்ப்பில் பங்கேற்ற மக்கள்,

– நோர்வேக்கு தார்மீகப் பொறுப்புள்ளது

– மௌனத்தின் மூலம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினை நோர்வே அங்கீகரிக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது

– இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற வேளையில்கூட நோர்வே மௌனம் சாதிப்பதானது, சமாதான முயற்சிகளில் ஈடுபடும் நோர்வேயின் தகுதியினை கேள்விக்குள்ளாக்குகின்றது

– உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும்

– மக்கள் மீதான குண்டுவீச்சு, பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நிறுத்துவதற்குரிய அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

– இனப்படுகொலையை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை மக்கள் முழக்கங்கள் மூலம் வலியுறுத்தினர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.