முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணம்

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராகவன் இன்று மதியம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கடராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழ்க்கை வரலாறு

ஆர்.வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் ராஜாமடம் என்ற கிராமத்தில், 1910ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்தார்.

சென்னையில் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். சட்டப் படிப்பை முடித்த பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியைத் தொடங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு 2 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.

நாட்டின் முன்னணி வக்கீல்களில் ஒருவராக விளங்கியவர் வெங்கட்ராமன்.

1946ம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார்.

1950ம் ஆண்டு நாட்டின் முதல் தற்காலிக நாடாளுமன்றத்திற்கு இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டப்பூர்வமாக அமைந்த முதல் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக தேர்வானார்.

1977ம் ஆண்டு மீண்டும் லோக்சபா உறுப்பினரானார். பின்னர் மத்திய நிதி அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராகவம் பதவி வகித்துள்ளார்.

1984ம் ஆண்டு துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் அவர் நீடித்தார்.

இதையடுத்து 1987ம் ஆண்டு குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

98 வயதான வெங்கட்ராமன், 1987ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி முதல் 1992ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவியை வகித்தார்.

Source & Thanks ; aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.