ஆப்கானிஸ்தான் நிலைமை அபாயகரமாக இருக்கிறது: அமெரிக்கா

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை அபாயகரமாக உள்ளது. அது மேலும் மோசமாகமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒபாமா அரசு எடுத்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் நிலைமை அபாயகரமாக உள்ளது. அது மேலும் மோசமாகாமலும், அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலும் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தனது தேர்தல் பிரசாரத்தின்போதே ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா தெரிவித்திருந்தார்.

2001ம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதலைப் போலவே மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் வாழும் அமெரிக்கர்களின் நலன் குறித்து ஒபாமா நிர்வாகம் கவலை கொண்டுள்ளது. அவர்களுக்கு சிக்கல் ஏற்படாத வகையில், நிலைமை மேலும் மோசமடையாத வகையிலான நடவடிக்கைகளை அது திட்டமிட்டு வருகிறது.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கேட்ஸ், முப்படைகளின் தளபதிகள், ஈராக், ஆப்கானிஸ்தானுக்கான ராணுவ தளபதிகள் ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அதிபர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆப்கான் எல்லைப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது குறித்து அதிபர் கவலை கொண்டுள்ளார் என்றார் கிப்ஸ்.

கடந்த வாரம் அதிபர் ஒபாமா பேசுகையில், அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும், மையப் புள்ளிகளாக உள்ளன. இரு நாடுகளும் உலகத் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் சிறப்புத் தூதுவராக ரிச்சர்ட் ஹால்ப்ரூக்கை நியமித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.