தமிழகத் தலைவர்கள் வன்னிக்குப் போய் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்: மகிந்த கிண்டல்

போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார்.

இணைய சஞ்சிகை ஒன்றுக்கு மகிந்த பேட்டி அளித்ததாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்:

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி, அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் வன்னி பிரதேசத்திற்கு பயணம் செய்து அங்கு மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோர வேண்டும்.

பொதுமக்களை ஆயுதமுனையில் தடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வரும் புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும்.

கருணாநிதி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த விரும்புவாரானால் அவர் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு புலிகளிடம் பகிரங்கமாக கோரவேண்டும். அப்படியானால் சிறிலங்கா அரசாங்கமும் கருணாநிதியும் முன்மொழியும் ஒரு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையில் அதனைச் செய்ய முடியும் .

கருணாநிதி சிறிலங்கா வரும்போது அவரோடு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவையும் கூட தன்னோடு கூட்டிவர முடியும். அப்பாவி தமிழ் மக்களை தமது இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் புலிகளிடம் அவர்களை விடுவிக்குமாறு கோர வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் உண்மையான நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிழையான வழிநடாத்தல்களுக்கு தமிழகத் தலைவர்கள் உட்பட வேண்டாம் என மகிந்த கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : /puthinam.com

Leave a Reply

Your email address will not be published.