அக்குபிரஷர், கவுன்சலிங் செய்வோருக்கு மவுசு : சாப்ட்வேர் ஊழியர்கள் அலைமோதல்

பெங்களூரு : பெங்களூரு நகரில் கவுன்சலிங் மற்றும் அக்குபிரஷர் தொழில் செய்வோருக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் சாப்ட்வேர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அலைமோதுகின்றனர்.இந்தியாவின் சாப்ட்வேர் தொழில்நுட்ப தலைநகரம் என்று சமீப காலம் வரை புகழப்பட்ட பெங்களூரு நகரில், நடுத்தர, சாதாரண சாப்ட்வேர் நிறுவனங்கள், பி.பி.ஓ.,க்கள், கால் சென்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களுக்கும் தொழில் பிரச்னை அதிகரித்து வருகிறது.

இதனால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. முன்னணி நிறுவனங்களில் உள்ள கான்ட்ராக்ட் முறையில் பணியாற்றிய ஊழியர்கள், பத்தாண்டுக்கு மேல் பணியாற்றி திறமை போன ஊழியர்கள் நீக்கப் பட்டு வருகின்றனர்.நடுத்தர, சாதாரண நிறுவனங்களில், பணியாற்றிய ஊழியர்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாப்ட்வேர் பணியில் இருந்தவரை, கைநிறைய சம்பளம் வாங்கி வந்தனர். அதனால், வீடு, கார் என்று கடனில் வாங்கித் தள்ளி விட்டனர்.ஆனால், வேலை பறிபோன நிலையில், அந்த கடன் பாக்கியை கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

இன்னும் சிலர், திருமணம் நிச்சயமாகி காத்திருந்த நிலையில் வேலை போனதால், மனம் உடைந்து போயுள்ளனர். இப்படி பல வகையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மன அழுத்தம் அதிகரித்ததால், மனோதத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர். மனோதத்துவ டாக்டர்கள் இதனால், பிசியாகி விட்டனர்.

இது போல,கவுன்சலிங் தொழிலில் உள்ளவர்களுக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. திருமணம் தடைபட்ட நிலை, கடன் சுமை போன்றவற்றில் இருந்து மீள இவர்களிடம் ஆலோசனை கேட்கும் சாப்ட்வேர் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.மன அழுத்தம் காரணமாக, சிலருக்கு தலைவலி போன்ற பாதிப்புகளும் வருகின்றன. இதில் இருந்து விடுபட, அக்குபஞ்சர் டாக்டர்களிடம் போவோரும் அதிகமாகி வருகின்றனர்.அக்குபஞ்சர் என்பது சீன மருத்துவ முறை. அதில் இருந்து உருவாக்கப்பட்டது தான் அக்குபிரஷர் மருத்துவ முறை. இந்த முறை டாக்டர்களிடமும் இளைஞர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

இது குறித்து, அக்குபஞ்சர் டாக்டர் ஒருவர் கூறுகையில், “வழக்கமாக வாரத்துக்கு 20 பேர் தான் வருவர்; இப்போது 100 பேருக்கு மேல் வருகின்றனர். எல்லாரும் இளைஞர்கள். பெரும்பாலும் சாப்ட்வேர் பணி பறிபோனவர்கள்’ என்று தெரிவித்தார்

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.