இலங்கைப் படுகொலை வீடு-கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்

திருச்சி: இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, திருச்சியில் வீடு, கடைகளில் நேற்று கருப்புக் கொடி ஏற்றி துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை குண்டுவீசி கொல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு நேரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதை ஏற்று திருச்சி ஸ்ரீரங்கம் காந்திஜி ரோட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்க அலுவலகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இதே போல் புலிவலத்தில் உள்ள கட்சியின் மாவட்ட தலைவர் சோழராஜன், அல்லூரில் உள்ள மாவட்ட துணைத்தலைவர் பழனிவேலு, மாவட்ட செயலாளர் ஈஞ்சூர் மருதை ஆகியோர் வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. குருவிகுளம் என்ற கிராமத்திலும் சில வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி இருந்தார்கள்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வெனீஸ் தெரு, அந்தோணியார் கோவில் தெருவில் சில வீடுகள், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களது சட்டைகளில் கறுப்பு சின்னம் அணிந்து கொண்டு சாலைகளில் நடமாடினார்கள்.

மேலும், திருச்சி சிந்தாமணி பகுதியில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினார்கள். இந்த தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கறுப்பு கொடிகளை அகற்றினர்.

வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியது தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு திருச்சி மாநகர அமைப்பாளர் வீரமணி, பெரியார் திராவிட கழக திருச்சி மாநகர அமைப்பாளர் ஸ்ரீரங்கம் முத்து, ம.தி.மு.க மாணவரணி செயலாளர் சேகர், ஜான் பாண்டியன் பேரவை தலைவர் சேட்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.ராமசந்திராபுரத்தில் உள்ள மந்தைவெளியில் சிலர் கறுப்புக்கொடியை கட்டி வைத்திருந்தனர். போலீசார் விரைந்து சென்று கறுப்புக்கொடியை அகற்றி விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணாடி முருகன், சிவகாசி ஒன்றிய துணைத்தலைவர் அய்யனார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பில் உலகத்தமிழர் பேரவை சார்பில் காளீசுவரன், ராமச்சந்திரன் ஆகியோரும், கூமாபட்டியில் தமிழ், தமிழர் இயக்க தலைவர் சோமுவும் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியதாக கைது செய்யப்பட்டனர்.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.