300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் “பாதுகாப்பு வலயம்”: வன்னி மக்களை சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய”மான – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு – உடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45  மணி முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் – முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந்திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை – உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலானோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் “கியூடெக்” நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகளை தமிழ்நெட்” இணையத்தளம் வெளியிட்டுள்ளது. 

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்  டாக்டர் ரி.வரதராஜா  அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.சபை,  சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.