ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதிகள் மீது என்கவுன்டர் ! : சதிவேலையில் ஈடுபடுமுன் சுட்டுக் கொலை

புதுடில்லி : உ.பி., மாநிலம் நொய்டாவில் இருந்து தலைநகர் டில்லிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகளை, போலீசார் சுட்டுக் கொன்றனர். குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தில் இவர்கள் டில்லிக்குள் நுழைய முயற்சித்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற் கும் மேலாகவே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் உ.பி., மாநிலத்தின் முக்கிய பகுதிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், காசியாபாத் நகரில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்கள் துப்பாக்கியுடன் காரில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. மாடல் டவுன் சோதனைச் சாவடி வழியாக அந்த கார், நொய்டாவுக்குள் நுழைந்தது குறித்தும் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதுகுறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், உ.பி., போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அன்று இரவு முழுவதும் நொய்டாவைச் சுற்றி பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டது. நேற்று அதிகாலை 2.15 மணியளவில் டில்லி-நொய்டா நெடுஞ்சாலையில் மாருதி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. யுனிடெக் குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த காரை நிறுத்தினர். ஆனால், அந்த கார் சற்றும் வேகம் குறையாமல் டில்லி நோக்கி விரைந்தது. காருக்குள் இருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து, போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர்.

அமிட்டி பாலம் அருகே, பயங்கரவாதிகளின் காரை போலீசார் மடக்கினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மீண்டும் போலீசாரை நோக்கி சுடத் துவங்கினர். ஆர்.டி.எக்ஸ்., போலீசாரும் திருப்பிச் சுட்டனர். சில நிமிடங்களில் காருக்குள் இருந்த இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுக் காயங்களுடன் கீழே விழுந்தனர். இந்த சண்டையில் வினோத்குமார் என்ற போலீஸ்காரரும் படுகாயம் அடைந்தார். காயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், பயங்கரவாதிகள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பயங்கரவாதிகள் வந்த காரை சோதனையிட்ட போலீசார், ஏ.கே., 47 துப்பாக்கிகள் இரண்டு, ஐந்து கையெறி குண்டுகள், ஏராளமான துப்பாக்கி குண்டுகள், ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்துக் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பாகிஸ்தான் பாஸ்போர்ட் இரண்டு, ஏராளமான புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

பாஸ்போர்ட்டில் இருந்த தகவல்கள் மூலம், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர் பரூக் மற்றும் அபு இஸ்மாயில் என தெரியவந்தது. பரூக், பாகிஸ்தானில் உள்ள அகாரா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், இஸ்மாயில் பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்புப் படை போலீசார், பயங்கரவாதிகள் கொண்டு வந்த கையெறி குண்டுகளை செயல் இழக்கச் செய்தனர்.

உ.பி., மாநில கூடுதல் டி.ஜி.பி., பிரிஜ்லால் கூறியதாவது: பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், உ.பி., போலீசாரும் இணைந்து இந்த என்கவுன்டரை நடத்தி முடித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருந்தோம். மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். என்ன திட்டத் தோடு அவர்கள் டில்லிக்கு சென்றனர் என்பது குறித்தும் விசாரணையை தீவிரப் படுத் தியுள்ளோம். குண்டுக் காயம் அடைந்ததும் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது, அவர்களில் ஒரு பயங்கரவாதி தனது பெயர் பரூக் என்றும் தனது கூட்டாளியின் பெயர் இஸ்மாயில் என்றும் தெரிவித்தான். இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு உள்ளூரில் உள்ள நபர்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு பிரிஜ்லால் கூறினார்.

உ.பி., போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “டில்லியில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக இவர்கள் வந்திருக்கலாம். லஷ்கர் அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது’ என்றன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.