அல் கொய்தா குறித்த துப்பு கிடைத்தால் பாக்.கை தாக்குவோம்: பிடன்

வாஷிங்டன்: பாகிஸ்தான் மண்ணில் அல் கொய்தா அமைப்பின் முக்கிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தால் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயங்காது என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சமீபத்தில் அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின. அதில் 17 பேர் பலியானார்கள். இந்நிலையில் இந்தத் தாக்குதலை அடுத்து புஷ் நிர்வாகத்தின் கொள்கையை ஒபாமா அப்படியே பின்பற்றுகிறாரா என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் துணை அதிபர் பிடன் முன் வைத்தனர்.

அப்போது பிடன் கூறுகையில், அல் கொய்தா அமைப்பு பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படுவது குறித்து உறுதியான தகவல் கிடைத்தால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும். அதற்கு தயங்கமாட்டோம்.

ஒபாமா அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, அல் கொய்தா நடவடிக்கைகள் தென்படும் இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.

சமீபத்தில் நான் பாகிஸ்தான் சென்ற போது, வசிரிஸ்தான் பகுதி அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இங்கு தான் அல் கொய்தா தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் சில தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.

இவர்களை அழிப்பதற்கு தேவையான உதவிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்றார் பிடன்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.