பீகார், மேற்கு வங்கத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மிரட்டல்; உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் பங்களாதேஷிலிருந்து ஊடுவிருவியுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நாளை தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக வந்து இந்தியாவின் மேற்பகுதியில் உள்ள மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர்கள் கிழக்கு பகுதியை குறி வைத்திருப்பதாக தெரிகிறது.

பங்களாதேஷிலிருந்து 25 பேர் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத கும்பல் ஒன்று முர்ஷிதாபாத் மற்றும் மால்டா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து நாளை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வாயிலாக ஊடுருவி 50 ஹஜிபுல் முகாஜிதீன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பீகாரில் உள்ள ஹதிகர், கிஷன்கஞ்ச் மற்றும் மேற்கு வங்கத்தில் இருக்கும் சிலிகுரி, மால்டா மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இது குறித்து மால்டா ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெயந்தா ராய் கூறுகையில், உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தீவிரவாதிகள் ரயில்களை தாக்க கூடிய அபாயம் இருப்பதால், அசாமுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் டெல்லி-திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ், திப்ருகர் செல்லாது. கவுகாத்தியில் நிறுத்தப்படும். டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்லும் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ஜல்பாய்குரி வரையே செல்லும். கவுகாத்தி செல்லாது.

தீவிரவாதிகள் மிரட்டல் குறித்து ஜார்க்கண்ட் போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.என்.பிரதன் கூறுகையில், உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். ரயில்களுக்கு சிக்கல் ஏழலாம் என்பதால் ரயில்வே போலீசாரையும் எச்சரித்துள்ளோம் என்றார் அவர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.