சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அமெரிக்க பங்குகளின் மதிப்பு ரூ.1,200 கோடி உயர்வு!

நியூயார்க்: ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு கடந்த வாரம் அமெரிக்காவில் திடீரென்று உயர்ந்துள்ளது.

நியூயார்க் பங்குச் சந்தையில், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) 24.60 கோடி டாலர் (ரூ.1,205.40 கோடி) அதிகரித்துள்ளது.

அதேசமயம், நியூயார்க் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 16 இந்திய நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் 300 கோடி டாலர் (ரூ.14,700 கோடி) சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ரூ.7,800 கோடி மோசடியை சத்யம் தலைவர் ராமலிங்க ராஜு ஒப்புக்கொண்டார். இதனால், இந்தியாவில் மட்டுமின்றி, நியூயார்க் பங்குச் சந்தைகளிலும் இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை கிடுகிடுவென சரிவடைந்தது.

இதனையடுத்து, ஜனவரி 16-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் 300 கோடி டாலர் (ரூ.14,700 கோடி) வீழ்ச்சியடைந்திருந்தது.

ஆனால் இந்நிலையில், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் எஸ்ஸார் குழுமங்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளன என்ற செய்தி பரவியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.