தீவிரவாதத்தைத் தடுக்க மும்பையில் மக்கள் படை தொடக்கம்

மும்பை: தீவிரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் போன்றோருக்கு உதவ பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய மக்கள் படை 24×7 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படையில், மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிற பொதுமக்கள் இடம் பெற்றுள்ளனர்.

தீவிரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்த அமைப்பு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்.

ஏற்கனவே மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து போர்ஸ் -1 என்ற பெயரில் கமாண்டோ படையை உருவாக்கப் போவதாக மகாராஷ்டிர அரசு கூறியிருந்தது. ஆனால் அது இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஆனால் மக்கள் இணைந்து ஒரு புதிய படையை உருவாக்கி விட்டனர்.

இதுகுறித்து மாணவி கவிதா மாலிக் கூறுகையில்,இந்த அமைப்பில் மாணவ, மாணவியர், பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். எத்தகைய நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் நாங்கள் அங்கு இருப்போம்.

குறிப்பாக தீவிரவாதத்தை வேரறுப்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்றார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.எஸ்.ஷிண்டே கூறுகையில், நெருக்கடி கால நிர்வாகம், அவசர காலங்களில் எப்படி செயல்படுவது, ஆயுதங்களைக் கையாளுவது எப்படி, இரவு நேரப் பயிற்சி உள்ளிட்டவை இந்த அமைப்பில் இருப்பவர்களுக்குத் தரப்படும்.

மேலும் தீயணைப்புப் பயிற்சியும், தீவிபத்துக்களின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார்.

தொடக்கத்தில் இரு படைகளுடன் இந்த மக்கள் படை செயல்படத் தொடங்கும். மே மாத இறுதிக்குள் இது 54 படைகளாக உயர்த்தப்படவுள்ளதாம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.