மும்பை தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார் பிரதமர்: பிரணாப்

டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் கடும் மன அழுத்தத்தில் இருந்தார் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரதமரை மிகவும் பாதித்து விட்டது. அவர் மன அழுத்தத்துடன் இருந்து வந்தார் என்றார் பிரணாப்.

பிரதமரின் பொறுப்புகளையும் சேர்த்து பார்ப்பது சிரமமாக இல்லையா என்ற இன்னொரு கேள்விக்கு பிரணாப் பதிலளிக்கையில், இது எனக்குப் புதிதல்ல. முன்பே இவ்வாறு பணியாற்றியுள்ளேன்.

1980ம் ஆண்டு நான் முதல் முறையாக கேபினட் அமைச்சராகப் பதவியேற்றேன். அப்போது வர்த்தகம், உருக்குத்துறை, சுரங்கம், சிவில் சப்ளைஸ் ஆகிய துறைகளை பார்த்தேன். எனவே இது புதிதல்ல என்றார் பிரணாப்.

பிரசாரத்திற்கு வருவார் பிரதமர்

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் வேகமாக முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு நிச்சயம் வரக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஓரிரு மாதங்களில் லோக்சபாவுக்கு தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் பிரதமருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் அவரது உடல் நலம் வேகமாக முன்னேறி வருவதைப் பார்க்கையில் அவரால் பிரசாரத்தில் தாராளமாக கலந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று படு ஆர்வமாக இருக்கிறாராம் பிரதமர். மேலும் அவரிடம் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளதால் டாக்டர்கள் சுத்தமாக பயத்தை விட்டு விட்டனர்.

இருப்பினும் பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடியும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து மே 20ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் நம்புகிறது. மார்ச் முதல் வாரத்தில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஸ்டார் பிரமுகரே தற்போது மன்மோகன் சிங்தான். அவரை மையமாக வைத்துத்தான் பிரசாரத்தை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தியுடன் சேர்ந்து மன்மோகன் சிங்கும் ஆங்காங்கு பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது. அதாவது சோனியா காந்தியின் கூட்டங்களில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரதமர் பங்கேற்பார்.

காங்கிரஸ் வட்டாரத்தில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமராக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள நல்ல பெயரை ஓரம் கட்டி விட்டு ராகுல் காந்தியை முன்னிறுத்தினால் அது தவறான அணுகுமுறையாகி விடும் என சோனியா அஞ்சுவதாக தெரிகிறது.

எனவே தேர்தல் பிரசாரத்தில், பிரதமரையே சோனியா முதன்மையாக வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks: aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.