`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.01.09) செய்திகள்

 

விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா படையினர் இன்று காலை பிரவேசித்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,சிறிலங்கா படையின் 593 ம் பிரிவு லெப்.கேணல் ஜயந்த குணரட்ன தலைமையிலான படையினர் இன்று காலை நந்திக்கடல் வழியாக தீவிர தாக்குதலை நடாத்தி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 7வது கெமுனு வோச் பிரிவு லெப். கேணல் சமிந்த லமஹேவ தலைமையிலான படையினரே முதலில் நகரை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
1996ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் முல்லைத்தீவு நகரம் மீட்கப்பட்டு இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் தர்ஷன் தாமராஜ் விடுதலைப்புலி சந்தேக நபர் என பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கடந்த 14ம் திகதி தைப்பொங்கல் பண்டிகையைக கொண்டாடிவிட்டு அனுராதபுரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற தர்ஷனை முகத்துவார பொலிஸார் கைதுசெய்து அழைத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் ஜீப் வண்டியில் சென்ற பொலிஸார் தர்ஷனை விடுதலைப்புலி சந்தேக நபர் எனக்கூறி ஏற்றிச் சென்றுள்ளனர். இதன்போது தான்மச்சான்என்ற சிங்கள திரைப்படம் மற்றும்சீன வசந்தயஎன்ற சிங்கள தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றில் நடித்துள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். எனினும் பொலிஸார் அவரையும் அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தன்னைப்பற்றி பிரசன்ன விதானகேவிடம் கேட்குமாறு தர்ஷன் கூறியபோதிலும் அவரைப் புகைப்படம் எடுத்த பொலிஸார் அவரை விடுதலைப்புலிகளின் பட்டியலில் இணைத்துள்ளனர்.
முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திலிருந்து மறுநாள் தெமட்டக்கொட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தர்ஷன் காவற்துறை அதிகாரி ஒருவரின் தலையீட்டை அடுத்து பிற்பகல் 4.30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடறிந்த இந்த தமிழ் பேசும் கலைஞர் சுமார் ஆறரை மணித்தியாலங்கள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தான் புலிச் சந்தேக நபர் என குற்றம் சுமத்தப்பட்டதாக தாஷன் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக நடித்த தனக்கே இந்த நிலைமை என்றால் அப்பாவி தமிழ் மக்களுக்கு எவ்வாறான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுமோ தெரியாது. தமிழர்களாக பிறந்த காரணத்தினால் எம்மீது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதோ என தர்ஷன் தர்மராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பகுதியில் உள்ள அணைக்கட்டு ஒன்றைத் தகர்த்து, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய படைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்திய‌தில் சிறிலங்க இராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்மடுக்குளம் என்றழைக்கப்படும் வன்னிப் பகுதியில் பாசனக் குளத்தின் அணையை நேற்று காலை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்ததாகவும், இதனால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் மூழ்கியதாகவும் சிறிலங்க இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழுப்புவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியை கைப்பற்றிய சிறிலங்க இராணுவம் பல இடங்களில் முகாம் அமைத்து இருந்தது மட்டுமின்றி, வெடிபொருள், ஆயுத கிடங்கையும் நிறுவி‌யிருந்தது.

இந்த நிலையில், அணையை குண்டு வைத்து தகர்த்த விடுதலைப் புலிகள், வெள்ளப் பெருக்கில் சிக்கிய இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சிறிலங்க இராணுவத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உதய நாணயக்காரா தெரிவித்தார். ஆனால் உயிரிழப்பு குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இத்தாக்குதலில் 1,500க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும, ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கொழும்புவில் இருந்து வரும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கப் படையினர் சற்றும் எதிர்பாராத வகையில் விடுதலைப் புலிகள் இந்த கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

.!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் என அரசாங்கம் தெரிவித்து முல்லைத்தீவை நோக்கிய நகர்விற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து நவீன கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது
முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கருதிய இதன் முதல் கட்டமாக இலங்கை அரசு சீனாவிடமிருந்து நவீன 160 டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளது.
படையினரின் முன்னோக்கிய நகர்வில் மழை, வெள்ளம், சகதி மற்றும் காடு சார்ந்த சூழலை எதிர் கொள்ளக் கூடிய அதி நவீன டாங்கிகள் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை ஏற்றிய கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் தென்னாசிய பிராந்திய தகவல் ஒன்று கூறுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பாகிஸ்தான் சென்ற நிலையில் மறுபுறம் சீன அரசிடமும் ஆயுத உதவிகள் கோரப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற
 
!!!!!!!!!!!!!!!!!
 
வன்னியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கல்மடு மற்றும் நெத்தலியாறு பகுதிகளில் கடும் சமர் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து விடுதலைப் புலிகள் நேற்று சனிக்கிழமை காலை கல்மடு குளத்தைத் தகர்த்துள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.
இரணைமடுக் குளத்திற்கு வடகிழக்கேயுள்ள கல்மடு பகுதியிலேயே கல்மடுவுக்கு வடகிழக்கேயும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் (35) தெற்கே நெத்தலியாறு பகுதியிலும் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.
58 ஆவது படையணியின் யுத்த டாங்கிகள் சகிதம் இந்தப் பகுதி நோக்கி முன்னகர்ந்த போதே இந்த மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் இப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டும் பத்துப்படையினர் வரை காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகதமிழ்நெற்இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் படையினர் வசமிருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டதுடன் தங்களால் கைப்பற்றப்பட்ட படையினரின் மூன்று சடலங்கள் எரியூட்டப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்புக்கு தெற்கே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடும் மோதலையடுத்து புலிகளின் இரு முகாம்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ரி.கனகசபை, எஸ். பத்மநாதன், ரி.பத்மினி, எஸ். அரியநேத்திரன் ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வன்னியில் அரச படைகளால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அவல நிலைமைகள் தொடர்பாகவும் அங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனை விட அரசியல் தீர்வொன்றின் மூலம் உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை மூழ்கடிக்கப்பட்ட டோரா படகில் இருந்த 19 கடற்படையினரின் சடலங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை எனலக்பிமவார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு டோரா அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
இந்த அணியில் இருந்த பி-434 இலக்கமுடைய டோரா படகினை அதன் கட்டளை அதிகாரி ஸ்குவாட்றன் லெப்டினன்ட் கொமாண்டர் என் எல் அபயசிங்க பரிசோதித்து கொண்டிருந்த சமயம் இரவு 11:30 நிமிடமளவில் பாரிய வெடியோசை எழுந்ததுடன் ஒரு நிமிடத்தில் டோரா படகு கடலில் மூழ்கிவிட்டது.
இதனைத் தொடாந்து எத்தனை கடற்புலிகளின் படகுகள் கடலினுள் ஊடுருவி உள்ளன என்பது தொடர்பாக சரியாக அறிய முடியாததால் கடற்படையினர் தமது டோரா படகுகளை நடுக்கடலை நோக்கி நகர்த்தியிருந்தனர்.
தாக்குதலின் பின்னர் நடைபெற்ற தேடுதலில் ஒரு கடற்படை சிப்பாய் காப்பாற்றப்பட்டுள்ளார். 3 அதிகாரிகளும் 16 கடற்படையினரும் காணாமல் போயுள்ளனர்.
கடற்படையினர் இரு விடுதலைப்புலிகளின் உடலங்களை மீட்டுள்ள போதும் படகு எவ்வாறு மூழ்கியது என்பது தொடர்பாக கடற்படை வட்டாரங்களில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும் வெடிமருந்து நிரப்பப்பட்ட கடற்புலிகளின் படகு டோராவுக்கு அருகாமையில் வெடித்திருக்கலாம் என்று கடற்படையினர் நம்புகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்து.
!!!!!!!!!!!
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை தொடர்ந்து நாட்டை விட்டு மேலும் நான்கு ஊடகவியலாளர்கள் வெளியேறி தெற்காசிய நாடு ஒன்றில் அடைக்கலம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூர்ய, சங்கத்தின் பொதுச் செயலாளர் போதல ஜயந்த, சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய, இயக்கத்தின் பேச்சாளர் உவிந்து குருகுலசூர்ய ஆகியோரே வெளியேறியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சனத் பாலசூர்ய, போதல ஜயந்த ஆகியோர் அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் வெளியீடுகளின் மூத்த பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முதல் வாரம்லங்காதீபபத்திரிகையையின் மூத்த பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் உபுல் ஜோசப் பெர்ணான்டோ, இரத்தினபால கமகே ஆகியோரும், மற்றும் எம்ரிவி இலத்திரனியல் ஊடக நிறுவனத்தை சேர்ந்த சேவன் டானியலும் வெளியேறியுள்ளனர்.

மேலும்சண்டே ரைம்ஸ்ஆங்கில வார ஏட்டின் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், நேசன் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் கீத்நொயர், இதழியல் கல்லூரி இணைப்பாளர் நாமல் பெரேரா, அனைத்துலக ஆங்கில செய்தி முகவர் நிறுவனம் ஒன்றை சேர்ந்த அனுருத்த கொக்குகப்புராச்சி ஆகியோர் ஏற்கனவே சிறிலங்காவை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது.
தயான் ஜெயதிலக்கவின் கருத்துக்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட சிறிலங்கா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் பாலித கோகன்னவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நெருங்கிய நண்பன் யார் என கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!
ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பௌத்த பிக்குவுக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கால சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
அத்துடன் 35 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 30 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வண.பரந்துவ தம்மதிலகே என்ற பௌத்த பிக்கு மீதே இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
1997 மார்ச் 2 ஆம் திகதி இவர் தங்கியிருந்த விகாரையில் இங்கிரிய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது இரு கிரனேட்டுகள், நான்கு பெற்றோல் குண்டுகள், துப்பாக்கி, வாள், கைத்துப்பாக்கி என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விகாரையில் உள்ள அலுமாரியிலும் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மாலினி குணரட்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பௌத்த பிக்கு ஒருவர் இவ்வாறான குற்றத்தைச் செய்வதற்கு நீதிவான் விசனம் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!
எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது.

தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோம். இந்தத் தொடர்பு கூடத் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. இது தவிர நாம் பயணிப்பது ஜனநாயக வழியிலேயே.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம்.

அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகளை அளிப்பது கடினமானதாக இருப்பினும் அதில் சிறிதளவு வெற்றி பெற்றுள்ளோம். அங்குள்ள நிலமையைப் பொறுத்தவரை கவலையில் ஆழ்த்தும் விடயமொன்றும் இருக்கினறது. அதாவது மோதல் நடைபெறும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்புகளுக்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கக் கூடும் என்பதே அந்த கவலையாகும் .

இந்நிலையில் அப்படியான உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்கும் பொருட்டு சகல தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுளள்து என்று வன்னி மோதல் நிலமை குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.
அவர் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக கூறுகையில்,

இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான மாகாணமெனக் கருதப்படும் இம் மாகாணத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தரும் சகல நடவடிக்கைகளுக்கும் பிரித்தானியா ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும்.

இங்கு தங்கியிருந்த நாட்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்தபோது அவர்கள் இன்னமும் பல சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியம் தந்தது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் முன்னேற்றகரமாக உள்ளது. யுத்தத்திலிருந்து இம் மாகாணம் தற்போது விலகியுள்ளதால் அதிக முன்னேற்றம் இங்கு ஏற்பட்டுள்ளது. எனினும் இவை எல்லாம் எந்நேரத்திலும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது.

பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாக தெரிகின்றது. பொருளாதார ரீதியில் முன்னேற்றததை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் மக்கள் தாங்கள் பாதுகாப்பான நிலையிலில்லை என்று உணரும்போது அந்த முன்னேற்றங்கள் அர்த்தமற்றதாகிவிடும்.

இம் மாகாணத்தில் உள்நாட்டு ,வெளிநாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்புகளும், .நா அமைப்பகளும் மக்களுக்கு பல்வேறு வழிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் அரச சார்பற்ற அமைப்புகளை சிலர் விமர்சிப்பது கவலையளிக்கின்றது. பல உள்நோக்குடனே சர்வதேச சமூகம் இங்கு பணியாற்றுகின்றது என சிலர் சந்தேகிக்கின்றனர்.இம் மாகாண மக்கள் நனமைக்காக சர்வதேச அமைப்புகளினால் எவ்வளவோ நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை வீதிகளில் செல்லும் போதும் சமூகத்திலும் பார்த்தால் தெரியும் என தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் பெய்ன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது, அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க தண்டனை சட்டக்கோவையின் 1091 ம் பிரிவின் கீழ் இனப்படுகொலை குற்றம் தொடர்பான 1000 பக்கங்களைக் கொண்ட மாதிரி குற்றப்பத்திரமொன்றை தயாரித்துள்ளதாகவும், அதை இரு வாரங்களுக்குள் வெளியிடுவதுடன் அமெரிக்க நாடாளுமன்றம் நீதி மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கவுள்ளதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளில், 3 ஆயிரம் தமிழர்கள் நேடிரயாக மற்றும் மறைமுகமாகக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அது நாளொன்றுக்கு சுமார் 3 கொலைகள் மற்றும் 3 காணாமல் போதல் சம்பவங்கள் விகிதமாகும்.
இதுவரை 13 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் பட்டினி, மருந்துகளின்மை என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மக்களுக்கான உணவை நிராகரிக்கும் அரிதான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மருந்துகள் காலாவதியானவையாக இருப்பதுடன் மாட்டுவண்டில்கள் அம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்படுகின்றன. அங்குள்ள நிலைமை கற்காலத்திற்கு ஒப்பானவையாகும்.
தமிழர் பிரதேசங்களில் 189 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இலங்கை இராணுவத்தின் அனுமதியின்றி ஒரு விரலைக்கூட அசைக்கமுடியாது. ஆயுதப் படைகளின் அக்கிரமங்கள் சர்வதேசத்தின் முன் வெளிச்சமாகும் என்பதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொலைக்காட்சி அலைவரிசைகள் காலூன்ற அனுமதிக்கப்படுவதில்லை.
இலங்கை அரசாங்கம் இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தியது. இது இரு இனங்களுக்கிடையிலான யுத்தம் அல்ல. மாறாக அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இன அழிப்பாகும். நாம் உலகின் கவனத்தை யுத்தத்தினால் தினமும் பலியாகும் அப்பாவிகளின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாம் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு அமெரிக்காவிலுள்ள அரசியல் வாதிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள புரூஸ் பெய்ன் அமெரிக்க ஊடகங்கள் தனக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபரான புரூஸ் பெய்ன் இன அழிப்புக்கு எதிரான தமிழர் குழுவின் ஆலோசகராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ளார்.

அனைத்துகட்சி குழு நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து கட்சி குழு குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதிக்கும், யசூசி அகாசிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தக் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி அகாசிக்கு நன்றி தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை அதிகாலை மாலைதீவுக்குப் பயணமானார்.
இது அவரது தனிப்பட்ட விஜயமென்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அவர் நாளை திங்கட்கிழமை இரவு நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
india
இருதய வால்வுகளில் இருக்கும் அடைப்புகளை அகற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டு சுயமாகவே சுவாசித்து வருவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

76 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய வால்வுகளில் பல அடைப்புகள் இருந்ததால் நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவரது நினைவு திரும்பிவிட்டார் என்றும், தனது குடும்பத்தார் மற்றும் மருத்துவர்களை பார்த்தார் என்றும் மும்பையின் ஆசியன் இருதய மையத்தின் மருத்துவர் ராமாகாண்ட் பாண்டா கூறினார். இவர் தான் பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் குழுவின் தலைவர் ஆவார்.

மன்மோகன் சிங்கின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர் என்றும் அவர் கூறினார். மேலும், வென்டிலேட்டரை நீக்குவதுதான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய செயல் என்றும் மருத்துவர் பாண்டா கூறினார்
!!!!!!!!!!!!!!!!!
இலங்கைப் பிரச்சினை குறித்து பிப்ரவரி 15-ம் தேதிக்குள் திமுக பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக்கிழமைசங்கத் தமிழ் பேரவைஎன்ற அமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:-
இந்த விழாவில் என்னைப் பலரும் பாராட்டினார்கள். பொன்னாடைகள், பட்டாடைகள் அணிவித்தார்கள். ஆனால் நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை.
பக்கத்து நாட்டில் நமது தமிழ் மக்கள் தங்களது தாயகத்தில் வாழ முடியாமல் துரத்தப்படுகிறார்கள். அவர்களின் துன்பத்துக்கு நாம் எப்போது முடிவு கட்டப் போகிறோம்?
அதற்காகத்தான் சட்டப் பேரவையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு இப்பிரச்னையில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.
வெள்ளிக்கிழமை (ஜன. 23) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது திமுக பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றேன்.
அதன்படி வரும் பெப்ரவரி 15-ம் தேதிக்குள் திமுக பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும். இந்த அறிவிப்பு நான் உங்களுக்கு அளிக்கும் பட்டாடையாகும
!!!!!!!!!!
இ‌ந்‌தியா‌வி‌ல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை ம‌த்‌திய அரசுதி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

‌தீ‌விரவா‌திக‌‌ளி‌ன் ஊடுருவலை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ள இ‌ந்ததி‌ட்ட‌ம் வரு‌ம் 2011-ம் ஆண்டுக்குள் நட‌த்‌தி முடி‌க்க தீவிர ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 20-ந் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சக‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்‌திரு‌ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெ‌ற்றது. மத்திய அரசின் உயர் அதிகாரிக‌ள் பலரு‌ம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் லீனா நாயர், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஜி.பி. ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் பல மு‌க்‌கிய முடிவுக‌ள் எடு‌க்க‌ப்ப‌ட்டன.

அ‌தி‌ல், தேசிய மக்கள் தொகை பதிவு திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்பெண் அனைவருடைய எண்ணிக்கையையும் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை போல, தேசிய பல்நோக்கு அடையாள அட்டை என்ற அடையாள அட்டையை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டையில் அடையாள அட்டைக்குரிய நபரின் பெயர், வயது, நிரந்தர, தற்காலிக முகவரி, தந்தையின் பெயர் போன்ற விவரங்களோடு அட்டைதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடலோர பகுதி மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்தவுடன், மற்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அடுத்தகட்டமாக அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்க வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு முடித்துவிட வேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குள் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்திய எலக்ட்ரானிக் கழகம் உள்பட மத்திய அரசின் 3 நிறுவனங்கள் மூலம் இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். அடையாள அட்டையின் வடிவ‌ம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
!!!!!!!!!!!!!!
ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்காக போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியதிரு‌ச்‌சி ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களை இடை‌நீ‌க்க‌ம் செ‌ய்து‌ள்ளத‌ற்கு கடு‌‌ம் க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள இந்திய கம்யூனிஸ்டு க‌‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலர் தா.பாண்டியன், மாண‌வ‌ர்களை உடனடியாக க‌ல்லூ‌ரி‌யி‌ல் சே‌ர்‌க்க த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழர்களை பாதுகாக்க உடனே போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் சட்டக்கல்லூரியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் சிவக்குமார், ராஜேஷ்குமார், திலீப்குமார், பிரகலாதன், தியாகராஜன் ஆகிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உடனே கல்லூரியில் சேர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று தா.பா‌ண்டி‌ய‌ன் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!
பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, தனது இந்திய சுற்றுப் பயணத்தை அர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸ் ரத்து செய்துள்ளார்.

தென் கொரியா மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள, அர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் திட்டமிட்டிருந்தார்.

தென் கொரியாவும், இந்தியாவும் வெவ்வேறு சீதோஷ்ண நிலையைக் கொண்டவை என்றும், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு நாடுகளுக்குச் செல்வது கிறிஸ்டினாவின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து தனது தென் கொரியப் பயணத்தை ரத்து செய்து விட்டு, இந்தியாவில் மட்டும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார் கிறிஸ்டினா.

இந்நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. தொடர்ந்து சில வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால், அதிபர் கிறிஸ்டினா தனது இந்தியப் பயணத்தையும் தற்போது ரத்து செய்துள்ளார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

 
world
ஏடன் வளைகுடா பகுதியில் 25 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட ஏமன் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலை கடற்கொள்ளையவர்கள் விடுத்துள்ளனர்.

ஏடன் வளைகுடாப் பகுதியில் கடந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி சென்று கொண்டிருந்த ஏமன் நாட்டிற்கு சொந்தமான எம்.டி.பிஸ்காக்லியா என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

அப்போது அதில் இருந்த ஒரு ஐயர்லாந்து சிப்பந்தி, 2 இங்கிலாந்து காவலாளிகள் கடலில் குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து படகில் மீதமிருந்த 25 இந்தியர்கள், 3 வங்கதேசத்தினரை பிணையக் கைதிகளாக கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்து விட்டதாக கென்யாவைச் சேர்ந்த தூதர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து வரும் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அமெரிக்க அரசின் சார்பில் நிதி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான உத்தரவில் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

அதிபர் புஷ் பதவிக்காலத்தின் போது சர்வதேச அளவில் செயல்படும் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதியுதவியை ஒபாமா மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைய முடியும் என அமெரிக்க அமைப்பு ஒன்றின் செய்தித் தொடர்பாளர் டெய்ட் சய் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984இல் அப்போதைய அதிபர் ரொனால் ரீகன் (குடியரசுக் கட்சி) சர்வதேச அளவில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவரது ஆட்சிக்குப் பின்னர் அடுத்து வரும் ஜனநாயகக் கட்சி அரசு இந்த உத்தரவுக்கு தடை விதிப்பதும், அதன் பின்னர் பதவிக்கு வரும் குடியரசுக் கட்சி இந்த உத்தரவின் மீதான தடையை நீக்குவதுமாக இருந்த நிலையில், கடந்த 2001இல் அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ் (குடியரசுக் கட்சி) இந்த உத்தரவிற்கு தடைவிதித்தார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த திட்டத்திற்கு அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் தடைவிதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா அதிபராக பதவியேற்றுள்ளதால் ரெனால்ட் ரீகன் நடைமுறைப்படுத்திய திட்டத்தின் மீதான தடை தொடரும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிராக கருக்கலைப்பு நிதியின் மீதான தடை உத்தரவை ஒபாமா நீக்கியுள்ளார்.
!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படத் தயார் என ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள அதிபர் மெட்விடேவ், நேற்று அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்விடேவ், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முந்தைய அரசுகளை விட தற்போதைய ஒபாமா தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையைப் பொறுத்த வரையில் எந்த நாட்டுடனும் முழு அளவில் இணைந்து பணியாற்ற நாங்கள் (ரஷ்யா) தயாராகவே உள்ளோம். இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல என மெட்விடேவ் கூறியுள்ளார்.

இதேபோல் சரக்குகள், உணவுப் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு செல்லும் பணியில் நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.