விடுப்பு ஊதியம் ‘கட்’ : அரசு ஊழியர்களுக்கு ‘ஷாக்’

பெங்களூரு : அரசு ஊழியர்களுக்கு, ஈட்டிய விடுப்பு நாட்களை பணமாக மாற்றிக் கொள்ளும் சலுகையை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது; இதனால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக அரசில் ஐந்தரை லட்சம் ஊழியர்கள் உள்ளனர்; இவர்களின் மாதச் சம்பளத் தொகையைக் கணக்கிட்டால், அரசுக்கு செலவு 500 கோடி ரூபாய். அரசு ஊழியர்கள் சம்பளத் துக்கு மட்டும் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் செலவாகிறது. செலவைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஆண்டின் இறுதியில் அளிக்கப்படும், ஈட்டிய விடுப்புக்கான ஊதியத் தொகையை இந்தாண்டு அமல்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு நாட்களை அரசிடம் “சரண்’ செய்தால், அதற்கு ஈடான சம்பளப் பணம் தரப்படும். ஆண்டுதோறும் கிடைக்கும் இந்த தொகை தான், பல ஊழியர்களுக்கு கடனை அடைக்க உதவியாக இருந்தது. ஆனால், இந்த முறை இது ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“இதற்கு முன் இப்படி ஈட்டிய விடுப்புத் தொகை தருவது ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று அரசு தரப்பில் கூறினாலும், ஊழியர் சங்கம் மறுக்கிறது. “2003ல் இப்படி ரத்து செய்ய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், எதிர்ப்பு தெரிவித்ததும் வாபஸ் பெறப்பட்டது’ என்று சங்கத்தலைவர் பைரப்பா கூறினார். அரசு செலவுகளைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடியூரப்பா அரசு எடுத்து வருகிறது. கடைநிலை ஊழியர்களுக்கு சீருடை வாங்குவதற்காக அளிக்கப்படும் 200 ரூபாய் அலவன்சும் இந்த முறை ரத்து செய்யப் பட்டுள்ளது

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.