தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அமெரிக்கா வாழ் தமிழர்கள் நேற்று இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, நேற்று நண்பகல் 12 மணிக்கு அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தினர்.

இலங்கை தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

சிங்கள படையினருடன், போர் முனையில் இந்தியப் படை அதிகாரிகளும் சேர்ந்து செயல்படும் படங்களைத் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்தனர். மேலும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலை போருக்கு இந்தியா புரிந்து வரும் உதவியைக் கண்டித்தனர்.

மகாத்மா காந்தி போல வெள்ளை உடையணிந்து, ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலைப் பாடிய படி, அமைதியைப் போதித்த அந்த மகான் பிறந்த நாடு, போரை நடத்துவதற்கு அல்லாமல், போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே பாடுபட வேண்டும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறத்தினார்கள்.

பேரணியின் முடிவில் அமெரிக்க இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராஸ்மல்கோத்ரா, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் பேசினார். அப்போது தனது கருத்தாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் தமிழர் பிரதிநிதிகளால் சொல்லப்பட்ட கருத்துக்களை அவர் பொறுமையாக கேட்டார்.

சிங்கள அரசு எப்போதும் இந்தியாவின் நண்பனாக இருந்ததில்லை. அது ஒரு சந்தர்ப்பவாத நாடு. இந்தியா-பாகிஸ்தான் போர்க் காலத்தில், பாகிஸ்தான் வான்படைக்கு எண்ணெய் நிரப்பும் தளமாக சிங்கள அரசு அன்று செயல்பட்டது.

இப்போதும் அது பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது. அதேநேரம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியையும் பெறுகின்றது. இந்தியாவா, அல்லது பாகிஸ்தானா தேவை என்ற நிலை வரும் போது அது பாகிஸ்தான் மற்றும் சீனா பக்கமே போகும்.

ஆனால் தமிழர்கள் அப்படியானவர்கள் இல்லை. தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நண்பர்கள். தமிழர்களே இந்தியாவின் இயற்கையான உறவுகள். ஏனெனில் ஒரே வேரிலிருந்து வந்த ஒரே தமிழினம் தான் தமிழ்நாட்டிலும், ஈழமண்ணிலும் வாழ்கின்றது.

இந்திரா காந்தி இறந்தபோது சேர்ந்து அழுதவர்கள் நாங்கள்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது சேர்ந்து அழுதவர்களும் நாங்கள்தான். ஆனால் அப்போதெல்லாம் சிரித்து மகிழ்ந்தவர்கள் சிங்கள தரப்பினர்கள் தான்.

தமிழர்கள் எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இந்தியாவின் தெற்கில் ஒரு பெரும் காப்பு அரணாக ஈழத்தமிழர்கள் இருப்பார்கள். எனவே ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து இதே கருத்துக்களை உள்ளடக்கிய மனு ஒன்றை இந்திய தூதரக அதிகாரியிடம் வழங்கினார்கள்.இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கவனஈர்ப்புப் பேரணியின் போது இந்தியப் பிரதமருக்கு விலாசமிடப்பட்ட மகஜர் இங்குள்ள இந்தியத் தூதர் ராஸ்மல்கோத்திராவிடம் கையளிக்கப்பட்டது.

பேரணியில் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகர் இ.உருத்திரகுமார் விசேட உரையாற்றினார். வன்னிமீது தற்போது படையினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று கோரியே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுலோக அட்டைகளை மக்கள் தாங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் பேரணி முடிந்தபின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்பும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வன்னியில் இடம்பெறும் படுகொலையை நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரணியினர் கோஷம் எழுப்பினர்.

Source & Thanks : /www.tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.