திடுக்கிடும் திருப்பம் – ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை – தினமலர் நிருபர் கைது

புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தினமலர் பத்திரிகையின் பாகூர் நிருபர். அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் ராஜா(29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி. அகர்வால் கூறியதாவது:

ராஜீவ் சிலை அவமதிப்பு தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் எண் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 19ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ராஜீவ் சிலை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்ணை தொடர்பு கொண்டபோது பாகூர் குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பது தெரியவந்தது. விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக இவர் கூறினார். தீவிர விசாரணையில் சிலை அவமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். ராமசாமியின் சித்தப்பா மகன் ராஜா(29) என்பவர் உதவியாக உடன் இருந்து இருக்கிறார். பைக்கில் உருவ பொம்மையை கொண்டு வந்து இருக்கின்றனர். உருவ பொம்மையை ராஜா தூக்கிவிட ராமசாமி, சிலையில் கட்டியிருக்கிறார்.

இவ்வாறு அகர்வால் கூறினார்.

கைதான தினமலர் நிருபர் ராமசாமி, ராஜா ஆகியோரை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி சுதா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புதுவையில் நேற்று அளித்த பேட்டி:

ராஜீவ் சிலை அவமதிப்பு நிகழ்வு தொடர்பாக குற்றவாளி யார் என அடையாளம் காணும் முன் விடுதலை சிறுத்தைகளை அத்துடன் இணைத்து தினமலர் நாளிதழ் அவதூறு பரப்பியது. இப்போது கைதாகி உள்ள ராமசாமி, ராஜா ஆகிய இருவரும் தலித் அல்லாதவர்கள் என்பதும், அதில் ராமசாமி என்பவர் தினமலர் நிருபர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் நிருபர் மட்டும் பொறுப்பாக இருக்க மாட்டார். தினமலர் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இதன் பின்னணியில் இருப்பதாக ஐயப்படுகிறோம். இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடையே கடுமையான முரண்பாட்டை உருவாக்கி, புதுவை – தமிழகத்தில் மிக மோசமான வன்முறையை தூண்ட வேண்டும் என்பதும், அதன்மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கமாக உள்ளது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Source & Thanks : www.yarl.com

Leave a Reply

Your email address will not be published.