பிரதமருக்கு பைபாஸ் ஆபரேஷன் – 11 டாக்டர்கள் செய்கிறார்கள்

டெல்லி: இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 11 டாக்டர்கள் கொண்ட குழு இன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து வருகிறது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரும், பிரதமரின் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி தலைமையில், டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில், டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் உள்ளனர்.

காலை எட்டே கால் மணியளவில் ஆபரேஷன் தொடங்கியது. ஆபரேஷன் முடிய குறைந்தது 5 அல்லது 6 மணி நேரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை டாக்டர்கள் குழு

அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வரும் டாக்டர்கள், எய்ம்ஸ் மற்றும் மும்பை ஆசிய இருதவியல் கழகத்தைச் சேர்ந்த தலை சிறந்த நிபுணர்கள் ஆவர்.

அறுவைச் சிகிச்சைக்காக மும்பையிலிருந்து விசேஷ சாதனங்கள் 20 பெட்டிகளில் விமானம் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்களுக்கு முன்பு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியாகிராபி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ளன.

அதில், பிரதமரின் இதயக் குழாய்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அடைப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பலத்த பாதுகாப்பு

பிரதமருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதைத் தொடர்ந்து எய்ம்ஸ் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதால், நாளை மறுதினம் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார். அதேபோல அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார்.

குடியரசு தினத்தன்று அமர் ஜவான் ஜோதி பகுதியில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்குவார்.

வீர தீரச் செயல் புரிந்த சிறார்களுக்கு வழங்கப்படும் விருது நிகழ்ச்சியை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நடத்துவார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரணாப் முகர்ஜியிடம் பொறுப்புகள்

பிரதமர் குணமடைந்து மீண்டும் பணிக்கு வரும் வரை அவர் வகித்து வந்த பொறுப்புகளை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனித்துக் கொள்வார். நிதித்துறைப் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

பிரணாப் முகர்ஜியே அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்வார்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்தில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ரத்தக் குழாய் அடைப்புகள் அதிக அளவில் இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் குடியரசு தின விழா முடிந்த பின்னர் செய்யலாமே என்று பிரதமர் கூறியுள்ளார். இருப்பினும் எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்று டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்தே அறுவைச் சிகிச்சைக்கு பிரதமர் சம்மதித்தார்.

மருத்துவமனைக்குச் செல்லும்போது பிரதமர் வழக்கம் போலவே இருந்தார் என்றும், எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அத்வானி வாழ்த்து

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நடைபெறும் அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்று, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் உடல் நலம் பெற வேண்டி பல பகுதிகளில் பிரார்த்தனைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.