முல்லைத்தீவில் புகுந்தது ராணுவம் – தாக்குதலில் 22 தமிழர்கள் பலி

கொழும்பு: முல்லைத்தீவுக்குள் ராணுவம் புகுந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வெறித் தாக்குதலில் 22 அப்பாவித் தமிழர்கள் பலியானார்கள்.

முல்லைத்தீவைப் பிடிக்க ராணுவம் கடுமையான தாக்குதலில் இறங்கியுள்ளது. அப்பாவி மக்களையும் தற்போது கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளது.

முல்லைத்தீவை சுற்றி வளைத்துள்ள ராணுவம் தற்போது உள்ளே புக ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இலங்கை ராணுவம் நேற்று தமிழர் களின் வீடுகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இப்பகுதி பாதுகாப்பானது, எனவே இங்கு வந்து விடும்படி ராணுவம்தான் கூறியிருந்தது. இதை நம்பி அப்பாவித் தமிழர்கள் இப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தனர்.

ஆனால் மக்களை வரவழைத்து விட்டு அவர்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளது ராணுவம்.

ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22 அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டனர். 106 பேர் கை-கால்களை இழந்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படு கொலை செய்யப்பட்ட தமிழர்கள்88 ஆக உயர்ந்து உள்ளது. 330 பேர் காயம் அடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லம், சைவச்சிறார் இல்லம் மற்றும் மகாதேவ ஆசிரமம் ஆகியவை மீது ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இனிய வாழ்வு இல்லம் மாற்று திறன் படைத்தோருக்கான இல்லமாகும். அதாவது உடல் குறைபாடு, மனக் குறைபாடு கொண்டோர் வசிக்கும் இல்லமாகும்.

அதேபோல, மகாதேவா ஆசிரமம் ஆதரவற்ற சிறார்களை பராமரிக்கின்ற சிறுவர் இல்லம் ஆகும்.

சைவச்சிறார் இல்லமும் சிறார்களை பராமரிக்கின்ற இல்லம் ஆகும்.

அதேபோல, வள்ளிபுனம் பாடசாலையில் இயங்கும் முல்லைத்தீவு பொது மருத்துவமனையை இலக்கு வைத்து இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் நடைபெற்ற போது மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையில் நோயாளிகள் இருந்தனர்.

இதில் மருத்துவமனைக்குள் இருந்த 5 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

மருத்துவமனைக்குள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.