விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதலில் 51 வீரர்கள் பலி

வன்னி: வன்னிப் பகுதியில் புதுக்குடியிருப்பு மற்றும் நெத்தலியாற்றுப் பகுதியில் புலிகள் மேற்கொண்ட பதிலடித் தாக்குதல்களில் 51 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் நேற்று இரவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:

புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு இலங்கை படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனை விடுதலைப் புலிகள் தடுத்து கடுமையாகத் தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.

இதில் ஆர்பிஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேநேரத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பகுதியில் ராணுவத்தினர் இரண்டாவது முறையாக பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது.

ராணுவத்துக்கு உதவியாக எம்ஐ-24 ரக ஹெலிகாப்டர்களும் தாக்குதல் நடத்தின.

அத்துடன், படையினருக்கு ஆதரவாக வான்தாக்குதலும் குண்டுவீச்சுத் தாக்குதலும் விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவிலானோர் காயமடைந்தனர்.

இந்தப் போரிலும் பிகே எல்எம்ஜி, ஏகே எல்எம்ஜி, பிகே எல்எம்ஜி, ஆர்பிஜி உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காயமடைந்த படையினரை ராணுவத்தினர் வாகனத்தில் அள்ளிச் சென்றனர். கொல்லப்பட்ட பல வீரர்களின் உடல்களைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அவற்றை பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.

ராணுவத்தினர் பிணங்கள் இன்னும் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.

புலிகளின் வீடியோ வெளியீடு!

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் இன்றைய நிலை, முல்லைத் தீவில் அவர்கள் போருக்கு ஆயத்தமாகும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை புலிகள் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு வன்னியிலிருந்து ஒரு செய்தி எனும் பெயரில் அனுப்பியுள்ளனர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.