குவான்டனாமோ முகாம் சிறையை மூட ஒபாமா உத்தரவு

வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும்.

கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, குவான்டனாமோ சிறை முகாம் மூடப்படும் என ஒபாமா அறிவித்திருந்தார்.

அதன்படி, அதிபரான உடனேயே 120 நாட்களுக்கு கைதிகளை விசாரிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் ஒபாமா. இந்த நிலையில் இந்த தீவு முகாமை மூடி விட உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமை முழுமையாக மூடி விட நடவடிக்கை எடுக்கவும் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் சிஐஏ ரகசிய சிறை மையங்களையும் மூட ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

குவான்டனாமோ முகாமை கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்தான் அமைத்தார். இங்கு தீவிரவாத புகார்களுக்குள்ளா கைதிகளை அடைத்து சித்திரவதை செய்து வந்தனர். இதை சித்திரவைத்க கூடம் என்று மனித உரிமை அமைப்புகள் வர்ணித்தன. மொத்தம் 245 கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமை மூடும் உத்தரவில் நேற்று ஒபாமா கையெழுத்திட்டார். இங்குள்ள கைதிகளை அமெரிக்கா தவிர்த்து வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து ஆராய கமிட்டி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஒரு வேளை கைதிகளை வேறு நாட்டுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிய வந்தால், இவர்களை எப்படி வைத்து விசாரிப்பது என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.