கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’?

சென்னை: ஆளுநர் உரையை உடைந்து போன மண்பாண்டம், ஓட்டை விழுந்த தகரக் குவளை என்று ஜெயலலிதா தனது தகுதிக்கேற்ப விமர்சித்திருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இதில் மதுரை திருமங்கலத்தில் வென்ற லதா அதியமான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

கூட்டத்திற்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: ஆளுநர் தனது உரையில் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தையும், திருமங்கலம் வாக்காளர்களின் வாக்குப் பதிவையும் களங்கப்படுத்துவதை போல எதிர்கட்சிகள் கருத்துக்களை சொல்லி வருகிறார்களே?

கருணாநிதி: மதுரையைப் பொறுத்தவரையில் தொடர்ந்து நடைபெற்ற முதல் 2 இடைத் தேர்தல்களிலும் இந்தத் தோழமைக் கட்சிகள் எல்லாம் எங்களோடு இருந்தார்கள். அவர்கள் இருந்தபோது தேர்தல் ஒழுங்காக நடந்தது என்றார்கள். இப்போது இல்லை என்கிறார்கள். தீர்ப்பை நீங்களே கூறுங்கள்.

கேள்வி: ஆளுநர் உரையை உடைந்து போன மண்பாண்டம், ஓட்டை விழுந்த தகரக் குவளை என்று ஜெயலலிதா தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: அவரவர் தகுதிக்கேற்ப ஆளுநர் உரையை விமர்சித்திருக்கிறார்கள்.

கேள்வி: பாரத ரத்னா தேர்வுக் குழுவினர் அந்தப்பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்திருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி: அதுபற்றி எனக்குத் தெரியாது. அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. அதைப் பற்றி நினைக்கவும் இல்லை. நீங்கள் எல்லாம் கொடுத்திருக்கின்ற ‘கலைஞர்’ பட்டமே எனக்குப் போதும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே?

கருணாநிதி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் பலவற்றில் மதுவிலக்கு இல்லை என்பதையும், மதுக் கடைகள் இருப்பதையும் அவர்களே அறிவார்கள் என்றார் கருணாநிதி.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.