சாலைக்கிராமத்தில் வரலாறு காணா எழுச்சி தமிழர் களத்தின் பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் நேற்று புதன்கிழமை மாலை தமிழீழ ஆதரவு எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாசறைப்பாணர் தேனிசைச் செல்லப்பாவின் எழுச்சிப் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது. “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலை இறுதியாக அவர் பாடியபோது….

ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களும் எழுந்து நின்று ஆரவாரித்தது தமிழ்த் தேசிய உணர்வும் தமிழீழ ஆதரவும் தமிழகச் சிற்றூர்களையும் கவ்விப் பிடித்திருக்கிறது என்ற நற்செய்திக்கு அது கட்டியம் கூறியது.

தலைமையுரை ஆற்றிய தமிழர்களத்தின் மாநில அமைப்பாளர் அரிமாவளவன் அவர்கள்,

“இந்தி தேசிய மற்றும் திராவிடத் தேசியத் தலைவர்களின் அடக்குமுறையையும் மீறி தாய்த் தமிழகம் இன்று தமிழ்த் தேசிய உணர்வில் கிளர்ந்து எழுந்து வருகிறது. இருப்பினும் விடுதலைக்காக தற்போது களமாடும் ஈழத் தமிழருக்கு நாம் விரும்பியபடி ஓர் எழுச்சிமிகு ஆதரவை அளிக்க முடியாததற்குக் காரணம் தமிழ்நாட்டை பன்னெடுங்காலமாக தமிழரல்லாத வந்தேறித் தலைவர்களே ஆட்சி செய்ததாகும்” என்றார்.

“இனி வரும் தேர்தல்களில் காங்கிரசு உள்ளிட்ட வந்தேறிக் கட்சிகளுக்கும், தமிழரல்லாத தலைமைகளுக்கும் பாடை கட்டுவதே நம் வேலை” என்றும் தமிழர்கள் விரைவில் நம் நாடு எது? தேசம் எது? என்பதை விளங்கிக் கொண்டு பூமிப்பந்தில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களே நம் சொந்தம் உறவு என்ற நம்பிக்கையோடு கைகோர்க்க வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார்.

தியாகி இம்மானுவேல் பேரவையின் பொதுச்செயலாளர், சந்திரபோசு அவர்கள் தன் உரையில்

கருணாநிதி உள்ளிட்ட திராவிடத் தலைமை ஈழத் தமிழருக்கும் இங்குள்ள தமிழருக்கும் இழைத்த இரண்டகங்களைப் பட்டியலிட்டார்.

இறுதியில் உரையாற்றிய புதுக்கோட்டைப் பாவாணன் அவர்கள்,

ஈழ விடுதலைப் போரில் நுட்பமான நகர்வுகளையும் அப்போரை முன்னின்று வழிநடத்தும் ஒப்பற்றத் தலைமையையும் வெகுவாகப் பாராட்டினார். அந்த விடுதலைப் போரைத் தமிழகத்திலும் இந்தியாவிலும் கொச்சைப்படுத்தும் நாசகார சக்திகளை அம்பலப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திராளாக கலந்து கொண்டனர். இரவு பத்து மணிக்கு நிகழ்ச்சி முடியும்வரை எவரொருவரும் கலையாது காத்திருந்து செய்திகளை உள்வாங்கியதும் எழுச்சியில் பங்கேற்றதும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு புதிய அதிர்ச்சியைக் கொடுத்தது. சாலைக்கிராம வரலாற்றில் இப்படியொரு எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடந்ததில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழர்களம் தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாட்களிலும் பல்வேறு ஊர்களில் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. நாளை நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை திடீரென முட்டுகட்டை போட்டு வருகிறது. இருப்பினும் தமிழர்கள நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்த சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

Source & Thanks : www.tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.