ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வாஷிங்டனில் நாளை பேரணி

ஈழத்தில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவு கொடுக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நாளை மாலை மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தை, மகாத்மா காந்தியடிகளின் வழியில் இந்திய அரசு அணுக வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தப்படவுள்ளது.

அமெரிக்கா முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்கேற்கவுள்ளனர். பேரணியில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல உடை தரித்து, காலித் தட்டுடன் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்து வருவதை சித்தரிக்கும் வகையில் இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவுள்ளது..

ஈழத் தமிழர்கள் இந்தியாவின் நண்பர்கள், தொப்புள் கொடி உறவுடையவர்கள். அவர்களைப் படுகொலை செய்து வரும் சம்பவங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு எவ்வித உதவியையும் இந்தியா கொடுக்கக் கூடாது. தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்கவுள்ளவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு இந்தியா, இலங்கையை கட்டாயப்படுத்த வேண்டும். இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமைதி திரும்பும். சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளது.

Source & Thanks : www.tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.