அறிவிக்கப்பட்ட ரயில்கள் என்னாச்சு: அடுத்த ரயில்வே பட்ஜெட் வந்தாச்சு

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வெளியிட்ட பட்ஜெட்டிலும், தமிழகத்திற்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிவித்தார். அவற்றில் சென்னை எழும்பூரில் இருந்து மற்றும் எழும்பூர் வழியாக புதிய ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டன.


சென்னை எழும்பூர் – சேலம், எழும்பூர் – திருச்செந்தூர், எழும்பூர் – திருச்சி, எழும்பூர் – ராமேஸ்வரம், எழும்பூர் – நாகூர், காசி – ராமேஸ்வரம், புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கான எண்களும் வழங்கப்பட்டன. மேலும், பெங்களூரு அருகே உள்ள யஷ்வந்த்பூர் – புதுச்சேரிக்கு வாராந்திர கரீப் ரத் (ஏழைகள் ரதம்) ரயிலும் அறிவிக்கப்பட்டது. இவற்றில், சென்னை எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (விழுப்புரம் – விருத்தாசலம் – ஆத்தூர் வழி) இயக்கப்பட்டுவிட்டது. அதேபோல், யஷ்வந்த்பூர் – புதுச்சேரி கரீப் ரத் வாராந்திர ரயிலும் சமீபத்தில் இயக்கப்பட்டுவிட்டது. ஆனால், விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி (மெயின் லைன்) வழியே இயக்கப்படவேண்டிய பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.

ஒரு பட்ஜெட்டில் அறிவித்த ரயில்கள் அடுத்த ரயில்வே பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன் இயக்கப்பட வேண்டும்.ஆனால், விழுப்புரம் – கடலூர்-மயிலாடுதுறை பிரிவில் மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் இரு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில் அவ்வழியே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட ரயில்களை இயக்க முடியாமல் ரயில்வே நிர்வாகம் திணறிவருகிறது.தற்போதுள்ள சூழ்நிலையில் விழுப்புரம் – கடலூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தாலும், கடலூர் – சிதம்பரம் – சீர்காழி -மயிலாடுதுறை இடையே உள்ள அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தான் ரயில்வே துறைக்கு சவாலாக இருந்து வருகிறது.

கடல் மீது அமைக்கப்பட்ட பாம்பன் பாலம் (பாம்பன்-மண்டபம் இடையே) இருந்து வந்த மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவது தான் மிகவும் சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் மிக சிறப்பாக அகல பாதையாக மாற்றி, அதில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஆனால், சிதம்பரம் – மயிலாடுதுறை இடையே கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை மாற்றி, அங்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி தான் ஜவ்வு மிட்டாய் போல் இழுத்துக்கொண்டே போகிறது.

விழுப்புரம் – கடலூர் – சிதம்பரம் – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் இடையே தான் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களைக் கவரும் பல கோவில்களும், சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.இப்பணிகள் தாமதம் காரணமாக அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்படாதது மட்டுமல்ல, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து திருச்சி வழியே அதிக நேரமும், பணத்தையும் விரயம் செய்து பயணிக்க வேண்டி உள்ளது.கடலூர் – சிதம்பரம் – மயிலாடுதுறை இடையே நடந்துவரும் அகல ரயில் பாதை பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தாலும், பல்வேறு பிரச்னைகள் காரணமாக அப்பணிகள் இக்கால கட்டத்திற்குள் முடியுமா என்பது சந்தேகமே.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்த ரயில்களையே இன்னமும் இயக்க முடியாமல் உள்ள நிலையில், தமிழகத்திற்கான புதிய ரயில்கள் குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவருமா என்ற சந்தேகம் பயணிகளிடம் துளிர் விடத் துவங்கி உள்ளது.

இரட்டை ரயில் பாதை எங்கே? : கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு – விழுப்புரம் – திருச்சி – திண்டுக்கல் (385 கி.மீ.,) இரட்டை அகல ரயில் பாதை திட்டம் இன்னமும் ஆரம்பகட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இத்திட்டத்தில் விழுப்புரம் வரை (103 கி.மீ.,) இரட்டை அகல ரயில் பாதை அமைத்தால் தற்போது இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்னும் சற்று விரைவாகவும், குறித்த நேரத்திலும் இயக்க முடியும்.மேலும், விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடையும் வரை விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி வழியாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட பிற ரயில்களையும் தற்காலிகமாக இயக்க முடியுமே?திருச்சி – காரைக்குடி – மானாமதுரை அகல ரயில் பாதை முடியும் வரை சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தற்காலிகமாக திருச்சி – திண்டுக்கல் – மதுரை – மானாமதுரை வழியாக இயக்கப்பட்டது என்பதும், அப்பாதை அமைக்கப்பட்ட பிறகு அவ்வழியே தற்போது அந்த ரயில் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.