பிடிபடும் எல்டிடிஈ ரன்வேக்கள்-விமானங்கள் எங்கே?

கொழும்பு: இதுவரை விடுதலைப் புலிகளின் 6 ரன் வேக்களை இலங்கைப் படையினர் பிடித்தபோதிலும், விடுதலைப் புலிகளின் விமானங்கள் பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் விமான செயல்பாடுகள் இலங்கைப் படைகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று இலங்கை விவசாய வளர்ச்சித்துறை அமைச்சர் ஹேமகுமாரா நாணயக்காரா கூறியுள்ளார்.

உலகிலேயே விமானப்படையை வைத்துள்ள ஒரே போராளி இயக்கம் விடுதலைப் புலிகள்தான். அடுத்தடுத்து விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி உலகையே அதிர வைத்தனர் புலிகள்.

செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட லின்-143 இலகு ரக விமானங்களைத்தான் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விமானங்களுக்கான உதிரி பாகங்களை கடத்தி வந்து அவற்றை தங்களது பகுதிகளில் வைத்து ஒன்று சேர்த்து விமானங்களாக மாற்றி பயன்படுத்தி அனைவரையும் அதிர வைத்தனர் புலிகள்.

இரணமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆறு ரன்வேக்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனால் விமானங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

அவற்றை புலிகள் எங்கு வைத்திருக்கின்றனர் என்றும் தெரியவில்லை. ஒரு வேளை அவற்றை மீண்டும் கழற்றி உதிரி பாகங்களை கொண்டு சென்று விட்டனரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அல்லது இலங்கைக்கு வெளியிலிருந்து அவற்றை புலிகள் செயல்படுத்தி வந்தனரா என்ற பெரும் சந்தேகமும் எழுந்துள்ளது.

புலிகளின் விமானங்கள் குறித்து ஒரு தகவலும் இல்லை என்று அமைச்சர் நாணயக்காரா கூறியுள்ளார். மேலும், வி்மானங்கள் தொடர்பான நிபுணர்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து தங்களது விமானப்படையை புலிகள் உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிநாடுகளைச் சேர்ந்த விமான நிபுணர்களையும், பொறியாளர்களையும் தங்களது பகுதிக்கு அழைத்து வந்து வி்மானப்படையை புலிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பொறியாளர்களும், தொழில்நுட்ப நிபுணர்களும், அதி வேகமாக செல்லும் படகுகளையும், கண்ணிவெடிகளையும் கூட தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

மொத்தம் ஏழு விமான ஓடுபாதைகளை புலிகள் அமைத்துள்ளதாக தெரிகிறது. இதுவரை ஆறு ஓடுபாதைகளை நாங்கள் பிடித்துள்ளோம். ஆனால் விமானங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை. அவை எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசிப் பகுதியான முல்லைத்தீவு வனப் பகுதிக்குள் கடைசி ரன்வே இருக்கக் கூடும் என ராணுவ தளபதி பொன்சேகா சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதுதான் மிகப் பெரிய ரன்வேயாக இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கிறோம். அனேகமாக அவர்களது விமானங்கள் இங்குதான் இருக்கக் கூடும். இவற்றை கண்டுபிடிக்க தற்போது முயன்று வருகிறோம்.

விடுதலைப் புலிகள் வசம் மொத்தம் 3 விமானங்கள்
இருக்கக் கூடும் எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார் என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் முல்லைத்தீவு பகுதியில் இலங்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.