அமெரிக்க உறவை மறு பரிசீலனை செய்வோம்: பாக். எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குறித்து சாதகமான கொள்கையை பாரக் ஒபாமா அரசு கையாளாவிட்டால் அமெரிக்காவுடனான உறவை துண்டிப்பது குறித்து பரிசீலனை செய்யவும் தயங்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கான ராணுவம் சாராத நிதியுதவியை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதில் அது செயல்படும் விதத்தைப் பொறுத்தே இனிமேல் நிதியுதவி தரப்படும் எனவும் நிபந்தனை போட்டுள்ளது.

இதற்கு பாகிஸ்தான் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் குறித்து அமெரிக்கா சாதகமான முறையில் செயல்படாவிட்டால் உறவையே துண்டிப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹூசேன் ஹக்கானி ஜியோ டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஒபாமா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் குறித்து சாதகமான கொள்கையை ஒபாமா கையாளாவிட்டால் அமெரிக்காவுடனான உறவை துண்டிப்பது குறித்தும் நாங்கள் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் குறித்து ஜார்ஜ் புஷ் மிகுந்த அக்கறை காட்டினார். அதை ஒபாமாவும் பின்பற்ற வேண்டும். இப்பகுதியின் பிரச்சினைகள் குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும்.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் நட்பு நாடாக, கூட்டு நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது என்றார் அவர்.

பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் முன்பு போல இருக்காது என்று தோன்றுகிறது.

Source & thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.