பாக்.குக்கு நிபந்தனையுடன் ‘வேலையை’ தொடங்கினார் ஓபாமா

வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செயல்படும் விதத்தைப் பொறுத்தே அந்த நாட்டுக்கு, ராணுவம் சாராத நிதியுதவிகளை அமெரிக்கா அளிக்கும் என பாரக் ஒபாமா தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அதிபர் பதவியில் ஒபாமா அமர்ந்த பின்னர் அமெரிக்க அரசின் புதிய வெளியுறவுக் கொள்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அதில், அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் பிடெனும், பாகிஸ்தானுக்கான ராணுவம் சாராத நிதியுதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். அதேசமயம், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது பாகிஸ்தானின் பொறுப்பாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தானுக்கான ராணுவம் சாராத நிதியுதவியின் தொகை 3 மடங்காக அதிகரிக்கப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானத்தை துணை அதிபர் பிடெனும், குடியரசுக் கட்சி எம்.பி. ரிச்சர்ட் லுகரும் ஏற்கனவே செனட் சபையில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிதியை வளர்ச்சிப் பணிகளுக்காக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளை கட்டுவது, சாலைகள் அமைப்பது, கிளினிக்குகளை உருவாக்குவது ஆகிய பணிகளுக்கு அது முக்கியத்துவம் தர வேண்டும்.

மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை முறியடிப்பதில் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.

மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செயல்படும் விதத்தைப் பொறுத்தே இனி அந்த நாட்டுக்கு ராணுவம் சாராத நிதியுதவியை அதிகரிப்பது குறித்து அமெரிக்கா முடிவு செய்யும்.

தடை செய்யப்பட்ட அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் பாகிஸ்தான் கூண்டோடு ஒழிக்க வேண்டும். தலிபான் தீவிரவாதிகளை, தனது எல்லைக்குள்ளிருந்து அது விரட்ட வேண்டும். செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணை தலிபான்கள் தங்களது செயல்பாட்டுக்கு பயன்படுத்துவதை பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது.

அரசு இயந்திரம் மற்றும் நீதித்துறை செயல்பாடுகளில் பாகிஸ்தான் அரசு தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா பதவியேற்ற உடனேயே, எடுத்த எடுப்பிலேயே பாகிஸ்தானுக்கு நிபந்தனை போட்டிருப்பது பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் பெரும் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.