அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி தேர்வு

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்படுகிறார். இதற்கான ஒப்புதலை அமெரிக்க செனட் சபை அளித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்படுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

எனினும் ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு தனது பதவியை ஹிலாரி தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதனால் செனட் சபையில் ஹிலாரி நியமனத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக நடக்கவிருந்த வாக்கெடுப்பு தள்ளிப் போனது. ஹிலாரியைத் தவிர 6 கேபினட் அமைச்சர்கள் நியமனத்திற்கு மட்டும் செனட் ஒப்புதல் தந்தது.

இந்நிலையில், அமெரிக்க செனட் சபை கூட்டத்தில் ஹிலாரி நியமனத்திற்கு நேற்று ஒப்புதல் தரப்பட்டது. செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.

இதனையடுத்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக ஹிலாரியை நியமிப்பதில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கியுள்ளது. விரைவில் வெளியுறவுத்துறை பொறுப்பை ஹிலாரி ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.