ஈழத் தமிழர்களை மத்திய அரசு காக்க வேண்டும்- ஆளுநர் உரையில் கோரிக்கை

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: இலங்கையில் தமிழர்கள் படு கொலை செய்யப்படுவதிலிருந்து அவர்களைக் காக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் தமிழக அரசின் திட்டங்கள், கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இந்த உரையின் முக்கிய அம்சங்கள்:

– புற்றுநோய், இதயநோய், சிறுநீரக கோளாறு, போன்ற கடும் நோய்களுக்கும், விபத்துக்களுக்கும் உயர் சிகிச்சை பெற ஏழை, எளிய சாமானிய மக்களால் இயலாது என்பதால் அவர்களுக்கு இலவசமாக உயர் சிகிச்சை பெறும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் என்ற புதிய திட்டம் ஒன்று இந்த ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற மருத்துவ காப்பீடு செய்யப்படும். இதற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும். இந்த புதியரகமான திட்டத்தால் தமிழகத்தில் சுமார் 1 கோடி ஏழை குடும்பத்தினர் பயனடைவார்கள்.

– இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலையை அளவுகோலாக கருதாமல் பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீடு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது.

இந்து, புத்த மத ஆதிதிராவிடர்களுக்கு இணையாக கிறிஸ்துவ மத ஆதிதிராவிடர்களையும் அட்டவணை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தேசிய அளவில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

– சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வளர்ச்சியியல் மொழியாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

– ஆதி திராவிடர் இடஒதுக்கீட்டில் அருந்ததி இனத்தவருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும்.

– தமிழகத்தில் பயங்கரவாத செயல்கள் தலைக்காட்டாமல் அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழர்களைக் காக்க வேண்டும்

– இலங்கையில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலம் தாழ்த்தாது இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

– சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்க ரூ.1,560 கோடி மதிப்பிலான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

– உள்நாட்டு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான நிதியுதவியை வழங்க வேண்டும்.

– கடந்த மாதம் முதல் மின் வினியோகம் சீரடைந்துள்ளது. பல்வேறு திட்டங்களால் வரும் ஆண்டுகளில் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும்.

– நான்காவது கட்டமாக 41 லட்சத்து 62 ஆயிரத்து 500 இலவச கலர் டிவிக்கள் நடப்பாண்டில் வழங்கப்படும்.

– சென்னை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.

மது விலக்கு…:

– தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 1300 மதுக்கூடங்களை (பார்கள்) அரசு மூடியுள்ளது என்பதையும், அதே போல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டி, தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அதுவரையில் ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள், கல்வி நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் விதிமுறைகளுக்கு மாறாக மதுக்கடைகள் அமையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளது.

மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10மணி முதல் இரவு 11மணி வரை என்றிருந்ததில் 1 மணி நேரத்தைக் குறைத்து – 2009 ஜனவரி 1-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்து அதற்கிணங்க ஆணையும் பிறப்பித்துள்ளது.

முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை.

ஓகனேக்கல் குடிநீர் திட்டம்:

ரூ. 1,330 கோடி மதிப்பீட்டிலான ஓகேனக்கல் குடிநீ்ர் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகி வருவதால், மின் தேவை கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் நிலையங்களின் உற்பத்தியைத் திறம்பட நிரு வகித்தும், பிற மாநிலங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தும் மின் விநியோகத்தைச் சீரமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.

இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த மாதம் முதல் மின் விநியோகம் கணிசமான அளவிற்குச் சீரடைந்துள்ளது.

வட சென்னையில் 1200 மெகாவாட் மற்றும் மேட்டூரில் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு உற்பத்தி நிலை யங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத் திடப்பட்டுள்ளது.

இவை தவிர, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்காக 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் மூலமாகக் கூடுதலாக 325 மெகாவாட் மின்சாரமும் இந்த ஆண்டு கிடைக்கும்.

மேற்கூறிய திட்டங்களின் மூலமாக வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.