தமிழீழத்தை உருவாக்கும் வகையிலான புதிய கொள்கையை வகுக்க வேண்டும்: அமெரிக்காவின் புதிய அரச தலைவரிடம் அமெரிக்க தமிழர்கள் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஒபாமா ஆட்சிப் பொறுப்பை எடுக்கும் நாளில் “ஒபாமாவுக்கான தமிழர்கள்” அமைப்பு அவருக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த புதிய அரசு ஆட்சி அமைத்ததும், தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமெரிக்கா இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை அது மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துவதற்கு அமெரிக்கா அழுத்தமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அரச தலைவருக்கான போட்டியில் பராக் ஒபாமாவுக்கு ஆதரவு கொடுத்திருந்த, “ஓபாமாவுக்கான தமிழர்கள்” என்ற அரசியல் செயற்பாட்டுக் குழு, இப்போது அவர் அட்சிப் பொறுப்பில் அமரும் வேளையில் – தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதை அவர் தனது முன்னுரிமைப் பட்டியலில் ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

1948 ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த அதே நாளிலேயே தமிழர்களுக்கு எதிரான போர் அங்கு தொடங்கப்பட்டு விட்டது.

30 வருடங்கள் நடைபெற்ற அமைதி வழியிலான போராட்டங்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது போன பின்னரே தமிழ் மக்களின் ஆயுதப்போர், விடுதலைப் புலிகளின் வடிவத்தில் 1980-களின் ஆரம்பத்தில் உருவெடுத்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன்றைய போர் கொத்தணிக் குண்டுகள், பீரங்கித் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்கின்றன. முழுமையான இனச் சுத்திகரிப்பினைச் செய்து, தமிழ் மக்களை முழுமையாக இலங்கைத் தீவிலிருந்து அப்புறப்படுத்துவதே இந்தப் போரின் நோக்கம்.

கிழக்குத் தீமோர் நாட்டினை உருவாக்க ஐ.நா. ஆதரவுகளை வழங்கியிருந்தது. கொசோவோ சுதந்திர நாடாக உருவாகுவதற்கு அமெரிக்காவும், நேட்டோவும் உதவியிருந்தன.

இதேவிதமாக தமக்கென உருவாக்கப்படும் ஒரு தனியான நாட்டிலேயே தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பதே “ஒபாமாவுக்கான தமிழர்க”ளின் திடமான நம்பிக்கையாகும்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேட் ஒ பிளெக், இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு பிரச்சினைக்குரிய சிறுபான்மை இனம் என்றவாறு சித்தரித்திருந்தார். அமெரிக்காவின் முன்னைய கொள்கைகளில் சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கை ஒரு உள்நாட்டு போர்.

அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொள்கைக்குள் தமிழ் மக்களிற்கு எதிரான இன அழிப்புப் போரையும் சேர்த்திருக்கின்றது சிறிலங்கா அரசு. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்ககளையும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது.

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் எனவும், ஒபாமா அதனைச் செய்வார் எனவும் அனைத்துலக தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.