ஐ.டி., துறை மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு*’எல்காட்’ நிர்வாக இயக்குனர் தகவல்

posted in: தமிழ்நாடு | 0

சேலம்:“”தமிழகத்தில் அமையும் ஒன்பது தொழில்நுட்ப பூங்கா மூலம் இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். அதற்கான பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட உள்ளது,” என, “எல்காட்’ நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ்பாபு தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையம் அருகில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. அது குறித்து “எல்காட்’ நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பாபு, சேலம் கலெக்டர் சந்திரகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் “எல்காட்’ சார்பில் சென்னை அருகே சோழிங்கநல்லூர், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஓசூர், வேலூர் நகரங்களில் ஒன்பது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. சோழிங்கநல்லூரில் பூங்கா அமைக்கும் பணி முடிந்தது. அங்கு வரவுள்ள சாப்ட்வேர் கம்பெனிகள் குறித்து அரசு முடிவெடுக்கும்.கோவையில் ஐ.டி., பூங்கா கட்டுமான பணி டிசம்பரில் நிறைவடையும்.

மதுரையில் வடபழஞ்சி, எலந்தைக்குளம் பகுதிகளில் நிலம் எடுக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.சேலத்தில் நிலம் தயாராகவுள்ளது, ஓரிரு மாதங்களில் நிலம் சீரமைப்பு, டெண்டர் கோருதல் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் துவங்கும். வேலூரில் நிலம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, புதிதாக அமைய உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது என்றாலும், குறைந்த முதலீடு, குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் கிடைப்பர் என்பதால், அதிக எண்ணிக்கையிலான கம்பெனிகள் சென்னையைத் தவிர மற்ற நகரங்களில் உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

தமிழகத்தில் அமையும் ஒன்பது தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் நேரடியாக இரண்டு லட்சம் பேரும், மறைமுகமாக நான்கு லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுவர்.தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களை கொண்டு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட வுள்ளன.

தமிழகத்தில் “எல்காட்’ நிறுவனம் சார்பில் 5,440 பொது சேவை மையங்கள் அமைக்கப் படும். கிருஷ்ணகிரியில் கிராமப்புற பி.பி.ஓ., சென்டர் துவக்கப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்படுவதால், மாநிலம் முழுவதும் கிராமங்களில் பி.பி.ஓ., சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.கிராமப்புறங்களை சேர்ந்த 8,000 மாணவர்களுக்கு “கால் சென்டர்’ பணிக்காக பயிற்சியளிக்க, “தாட்கோ’ நிறுவனம் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கிராமங்களில் ரூ.15 லட்சம் முதலீடு, மும்முனை மின்சார வசதி, அகண்ட அலைவரிசை வசதி ஆகியவற்றுடன் பி.பி.ஓ., சென்டர் அமைக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு “எல்காட்’ சார்பில் பி.பி.ஓ., கிளைகளை அமைத்துக் கொடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.