தமிழின அழிப்பை மேற்கொள்ள மருத்துவ சேவைகளையும் இலக்கு வைக்கிறது சிங்கள அரசு: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

தமிழின அழிப்பினைத் தீவிரப்படுத்துவதற்காக சிங்கள அரசாங்கம் மருத்துவ சேவைகளையும் தற்போது கையில் எடுத்துச் செயற்படுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

வன்னியில் நிலவும் மருத்துவ நெருக்கடி நிலை குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களை முற்று முழுதாக அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. மக்களை இலக்கு வைத்து எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களை தொடராக மேற்கொண்டு வருகின்றது.

இதனால் நாளுக்கு நாள் தமிழ் மக்கள் சாவினை எதிர்கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்து அல்லற்படும் மக்களும் இத்தாக்குதல்களுக்கு விதி விலக்காகவில்லை.

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று நாளுக்கு நாள் அனைத்துலகத்துக்கு பொய்ப் பரப்புரை மேற்கொண்டு வருகின்ற அரசு அவர்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றது.

இத்தாக்குதல்கள் மூலம் காயப்படுகின்ற மக்கள் உயிர் பிழைக்கக்கூடாது என்ற நோக்கோடு மருந்துத் தடை, நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்ல அனுமதிக்காமை உட்பட்ட கொடுஞ் செயல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களில் 65 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக இந்நிலை தொடர்கின்றது.

இதே மருத்துவமனையில் தாக்குதல்கள் மூலம் காயமடைந்த 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 41 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தசை அழுகல் மற்றும் ஏற்புவலி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் பென்சிலின் வகை மருந்து இல்லாத நிலை உள்ளது.

இதன் காரணமாக நோயாளர்கள் அவயவங்களை மேலதிகமாக இழந்தும், வீணாக உயிரிழந்தும் வருகின்ற சந்தர்ப்பங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

மயக்கும் மருந்து (KATAMINE) இல்லாத நிலை காணப்படுகின்றது.

ஏற்கனவே காயங்களுக்கு உள்ளாகி வலியால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்கள் இம்மருந்து இன்மையால் மயக்கமடையாமலேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனால் நோயாளர்கள் மேலதிக வலிகளை எதிர்கொள்ளல் உட்பட்ட பலத்த இடர்களை எதிர்கொள்கின்றனர்.

மருந்து கட்டப் பயன்படுத்தப்படுகின்ற பன்டேஜ், கோஸ் (பஞ்சணை) உட்பட்ட பொருட்கள் இன்மை மற்றும் படுக்கை வசதியின்மை போன்ற நெருக்கடி நிலைகளும் காணப்படுகின்றன.

இந்த மருத்துவமனையில் படுகாயம், சிறுகாயம் உட்பட்ட நோய்களைக் கொண்ட 450-க்கும் அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 150 கட்டில்களே மருத்துவமனையில் உள்ளமையால் ஏனைய நோயாளர்கள் தரையிலேயே படுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இதேபோல ஏனைய நோய்களுக்கான மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இந்த மருத்துவமனை போன்றே இடம்பெயர்ந்து இயங்குகின்ற வன்னியின் பெரிய மருத்துவமனைகளான கிளிநொச்சி பொது மருத்துவமனை, முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் ஏனைய பிரதேச மருத்துவமனைகளும் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு இயங்கி வருகின்றன. அந்த மருத்துவமனைகளுக்கும் பாரிய நெருக்கடி நிலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகிலேயே உயிர்காக்கும் உன்னத பணியான மருத்துவப் பணியினை இன அழிப்பிற்காகப் பயன்படுத்தும் அரசின் பயங்கரவாதச் செயலை அனைத்துலக சமூகம் உற்று நோக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.