பிரபாகரனை பிடிக்க தனிப்படை

கொழும்பு : முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க தனிப்படை ஒன்றை இலங்கை அரசு அமைத்துள்ளது. இதில் பாராசூட் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற அவர்களுடன் சிங்கள ராணுவம் கடும் போர் புரிந்து வருகிறது. தற்போது முல்லைத்தீவு மட்டுமே புலிகளின் பிடியில் உள்ளது.

முல்லைத்தீவை கைப்பற்று வதற்காக இலங்கை ராணுவத்தின் 7 படைப்பிரிவுகள் அனைத்து திசைகளில் இருந்தும் மெல்லமெல்ல முன்னேறி வருகின்றன. அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

எனவே, பிரபாகரனை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை இலங்கை அரசு அமைத்துள்ளது. அவர் பதுங்கியுள்ள இடம் தெரிய வந்ததும் அவரை பிடிப்பதற்காக பாராசூட் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் மூத்தத்தலைவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை பிடிப்பதற்காக தனிப் படை அமைத்துள்ளதாகவும், ராணுவ நடவடிக்கை தீவிரமாக இருப்பதால் அவர்கள் பிடிபடுவார்கள் என்று நம்புவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படகு மூலம் கடல் வழியே இவர்கள் தப்பிவிடாமல் இருப்பதற்காக முல்லைத்தீவைச் சுற்றி போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அதே சமயம், இலங்கை விமானப்படையின் போர் விமானங்கள் வானத்தில் பறந்து புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமடு காட்டுப்பகுதிகளை கண்காணித்து வருகின்றன. பிரபாகரனின் மறைவிடங்கள் இரண்டை படைகள் அழித்துள்ளபோதிலும், பூமிக்கடியில் மேலும் பல மறைவிடங்களை பிரபாகரன் கட்டி வைத்திருக்ககூடும் என்று ராணுவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கரும்புலிகளுடன் ராணுவம் மோத நேரிட்டால் அந்த இடத்தில் பிரபாகரன் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் ஏனெனில் மிகுந்த விசுவாசிகளான இவர்கள் தான் பிரபாகரனுக்கு நெருக்கமான பாதுகாப்பு வளையமாக இருப்பவர்கள் என்றும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது சண்டை நடந்து வரும் பகுதியில் 30 கி.மீ. தூரத்திற்குள் தான் பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் பிரபாகரன் மறைந்திருக்க கூடும் என்றும் அவர் பிடிபட்டாலும் அல்லது தப்பிச் சென்றாலும் அது புலிகள் இயக்கதிற்கு பேரிடியாக அமையும் என்றும் இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Source & Thanks : maalaisudar.com

Leave a Reply

Your email address will not be published.