சத்யம்-வாங்க விரும்பும் எல் அண்ட் டி-எஸ்ஸார்!

டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், சத்யம் பிபிஓ பிரிவை எஸ்ஸார் நிறுவனமும் வாங்கி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிசி குப்தாவிடம், எல் அண்டு டி நிறுவனத் தலைவர் ஏஎம் நாயக் நேற்று கலந்து பேசினார்.

சத்யம் நிறுவனத்தில் எல் அண்டு டிக்கு 4 சதவிகித பங்குகள் உள்ளன. எல் அண்ட் டி நிறுவனம் சத்யத்தை ஏற்று நடத்த விரும்பினாலும், அது பற்றிய இறுதி முடிவை சத்யம் இயக்குநர் குழுவே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் குப்தா.

இதற்கிடையே பல வெளிநாட்டு நிறுவனங்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸை ஏற்று நடத்த விரும்புவதாக சத்யம் இயக்குநர் குழு உறுப்பினர் தருண் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ராமலிங்க ராஜு தலைவராக இருந்தபோதே, சத்யம் நிறுவனத்தை ஏற்று நடத்த பொருத்தமான முதலீட்டாளர்களை தேடித் தருமாறு டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச் நிறுவனத்தை கடந்த டிசம்பர் மாதம் நியமித்தார்.

சத்யத்தின் கணக்கு வழக்குகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்த மெர்ரில் லிஞ்ச் நிறுவனம், ராஜு செய்துள்ள மோசடிகளை அப்போதே தெரிந்து கொண்டு அதிலிருந்து விலகிவிட்டது. அதே நேரம் கமுக்கமாக, சத்யம் நிறுவனத்தில் இருந்த தனது பங்குகள் முழுவதையும் அன்றைக்கு நிலவிய நல்ல விலைக்கு விற்றுவிட்டது. தனது முதலீட்டை பாதுகாப்பாக திரும்ப எடுத்துக் கொண்ட பிறகு, இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய மெர்ரில் லிஞ்ச் நிறுவனம், சத்யம் நிறுவனத்துக்கு வேறு எந்த முதலீட்டாளர்களும் வர முடியாத அளவுக்குச் செய்துவிட்டது.

இதனால்தான் வேறு வழியின்றி உண்மையைச் சொல்லி பதவி விலகினார் ராஜு. சத்யம் சாம்ராஜ்யமும் சரிந்தது.

இப்போது எல்லா உண்மைகளும் தெரிந்த பின்னர் மாற்று வழிகளோடு சத்யம் நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்களும் போ்டடியிடுகின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம், இதே டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச் மீண்டும் சத்யம் நிறுவனத்தில் ஆர்வம் காட்டத் துவங்கியிருப்பதுதான்.

சத்யம் பிபிஓ:

இன்னொரு பக்கம், சத்யம் பிபிஓ நிறுவனத்தை ஏற்று நடத்த எஸ்ஸார் நிறுவனத்தின் பிபிஓ பிரிவான ஏஜி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு வரைவு ஒன்றையும் சத்யம் இயக்குநர் குழுவுக்கு ஏஜி அனுப்பியுள்ளது.

புதன்கிழமை காலை இந்தச் செய்திகள் வெளியாகத் துவங்கிய சில நிமிடங்களில் சத்யம் நிறுவனப் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன.

அரசின் மனநிலை:

ஆனால் இப்போதைக்கு சத்யம் நிறுவனத்தை வேறு எந்த நிறுவனத்தோடும் இணைக்க அரசு நியமித்துள்ள இயக்குநர் குழுவுக்கு விருப்பமில்லை என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

காரணம், முதலில் சத்யம் நிறுவனத்தின் உண்மையான பலம் என்ன? வருவாய் அளவு எவ்வளவு? திரும்ப செலுத்த வேண்டிய கடன்கள் போன்ற விவரங்களை இயக்குநர் குழு ஆராய்ந்து வருகிறது.

இந்த விவரங்கள் முழுவதும் உறுதி செய்யப்பட்ட பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.