சென்னையில் தவிக்கும் தென் கொரிய கப்பல்

சென்னை: துறைமுகத்துக்கு கொடுக்க வேண்டிய வாடகை மற்றும் ஏஜென்ட் செலவுகளை கட்ட தவறியதையடுத்து கோல்டன் பிரிசியா என்ற தென் கொரிய கப்பல் சென்னையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, தற்போது பல கப்பல் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பர்ஸ்ட் ஸிப்பங் என்ற கம்பெனியை சேர்ந்த கோல்டன் பிரிசியா என்ற கப்பல் பாமாயில் எண்ணெயை ஏற்றிக் கொண்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது.

இந்தக் கப்பல் தனது பயணத்தில் இருந்தபோதே தென் கொரியாவின் இதன் நிறுவனம் திவாலாகிவிட்டது.

இந் நிலையில் சென்னை வந்து சேர்ந்த இந்தக் கப்பல் சரக்குகளை இறக்கிய பின்னர் துறைமுகத்துக்கான வாடகை மற்றும் ஏஜென்ட் செலவுகளை கட்ட பணமில்லை.

நிறுவனம் திவாலாகிவிட்டதால் பணமில்லை என்று கப்பல் உரிமையாளர்கள் கைவிரித்துவிட்டனர். பணம் கட்டாததையடுத்து 25 ஊழியர்களுடன் இக்கப்பல் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்நிறுவனத்தின் 8 கப்பல்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைமுகங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு சம்பளம் கொடுத்தே 4 மாதங்களுக்கு மேல் ஆகிவி்ட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கப்பலின் உரிமையாளர்களுடன் பணத்தை கட்டிவிட்டு கப்பலை மீட்டு செல்வது மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த வமைப்பை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீகுமார் கூறுகையில், பொருளாதார பின்னடைவு கப்பல் துறையையும் அதிகம் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. இது போன்று கப்பல் பிடித்து வைக்கப்படுவது, தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இது தான் முதல் முறை. ஊழியர்களின் நலன் பற்றி தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம் என்றார் ஸ்ரீகுமார்.

இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கப்பல்கள் துறைமுகத்துக்குள் நுழையும் முன்னதாகவே பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி யூரியா ஏற்றி வந்த வியட்நாமின் வினாசின் என்ற கப்பலும் 23 ஊழியர்களுடன் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.