குவான்டானாமோ சிறை: கைதிகளை விசாரிக்க ஒபாமா 3 மாதம் தடை

குவான்டானாமோ பே (கியூபா): அமெரிக்க அதிபராகியுள்ள பாரக் ஒபாமா முதல் முக்கிய நடவடிக்கையாக கியூபாவின் குவான்டானாமோவில் உள்ள சிறைக் கூடத்தில் கைதிகளை விசாரிப்பதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கியூப கடற்பகுதியில் உள்ள குவான்டானாமோவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என சந்தேக்கிக்கப்படுவோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன.

கைதிகள் கொடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

புஷ் நிர்வாகம் இந்த சிறை முகாமை, சித்திரவதைக் கூடமாக மாற்றி விட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

பல கைதிகள், சொல்லொணா சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில், பதவியேற்க கையோடு முதல் உத்தரவாக இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரிப்பதை, 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெப்ரி கார்டன் கூறுகையில், நீதியின் நலனைக் கருதியும், அதிபரின் உத்தரவையடுத்தும் சிறை முகாமில் உள்ள கைதிகளிடம் விசாரணை நடத்துவது மே 20ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுகிறது.

விரைவில் இதுதொடர்பான உத்தரவு நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.

ஒபாமாவின் உத்தரவை, புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாப் கேட்ஸ், வாய் மொழியாக ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கடற்படையின் இந்த ராணுவ சிறை முகாமை மூடுவேன் என தேர்தல் பிரசாரத்தின்போதே ஒபாமா உறுதிபடக் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது இந்த சிறை முகாமில் 250 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவார்களா என்பது தெரியவில்லை.

குவான்டநாமோ சிறையில் உள்ள கைதிகளில் முக்கியமான நபர் காலித் ஷேக் முகம்மது. இவர் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் வழக்கில் கைதான நபர். இவரது வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது விசாரணைக்கு ஒபாமா தடை போட்டுள்ளதால் காலித் மீதான விசாரணை இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.