என்.ஐ.ஏ தலைவராக ராஜு பொறுப்பேற்பு-உட்கார இடமில்லை!!

டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியின் முதல் தலைவராக (இயக்குநர் ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ள ராதா வினோத் ராஜு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இருப்பினும் உட்கார்ந்து பணியாற்ற இன்னும் அவருக்கு அலுவலகமோ, இருக்கையோ ஒதுக்கப்படவில்லை.

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் முதல் தலைவராக 59 வயதாகும் ஆர்.வி. ராஜுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் ஆவார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அவர் ராஜு இப்பொறுப்பை வகிப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இன்று ராஜு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இருப்பினும் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு இன்னும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை. ராஜுவுக்கு உட்கார சேர் கூட ஒதுக்கப்படவில்லை.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை செயலாளர் மதுகர் குப்தா ஆகியோரை சந்தித்துப் பேசினார் ராஜு.

மதுகர் குப்தாவுடன் நடந்த ஆலோசனையின்போது, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் முக்கிய அதிகாரிகள் நியமனம் குறித்த பட்டியலை அளித்தார் ராஜு. இந்தக் குழுதான் நாடு முழுவதும் உள்ள தீவிரவாத வழக்குகளை (ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்படும் வழக்குகளை) விசாரிக்கும்.

இன்னும் ஒரு வாரத்தில் புலனாய்வு ஏஜென்சி தனது பணிகளை முழு அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1975ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜு. ஜம்மு காஷ்மீர் மாநில கேடரைச் சேர்ந்தவர்.

ஜம்மு காஷ்மீர் மாநில ஊழல் கண்காணிப்பு இயக்குநராக பதவி வகித்து வந்தார்.

நாட்டின் திறமையான ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவரான ராஜுவின் தற்போதைய நியமனம், தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்திலானது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, காந்தஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் வழக்கு, கடற்படை ஊழல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.

Source & Thanks : www.aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.