புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்: சிங்கள மக்களிடம் மகிந்த வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப் புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு சிங்கள மக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாவுலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மகிந்த உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:

பொறுமை இழந்த நிலையில் நாம் அன்று மாவிலாறில் தொடங்கிய படை நடவடிக்கைப் பயணத்தை இடை நிறுத்தாமலும் பின்வாங்கிச் செல்லாமலும் முன்னெடுத்துச் செல்கின்றோம். அதன் விளைவாக இன்று புலிகளும் அவர்களின் தலைவரும் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் சிக்குண்டுள்ளனர். மிகச்சிறிய எண்ணிக்கையைக் கொண்ட இக்குழுவினரை எமது படையினர் கடலினுள் தள்ளிவிடும் நாள் தூரத்தில் இல்லை.

அந்த நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை பறக்கவிட்டு நாம் இழந்து போய் இருந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உதவிய பாதுகாப்பு படையினரை வரவேற்பதற்கும் வாழ்த்துக் கூறுவதற்கும் ஆயத்தமாகுங்கள் என்ற செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், புலிகளின் வாய்களில் இருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையற்ற ஐக்கிய மிகுந்த நாடாக இந்நாட்டை பிரகடனப்படுத்தவிருக்கும் தருணத்தில்தான் மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றீர்கள்.

நீங்கள் அளிக்கும் வாக்குகள் நாம் செல்லும் இப்பயணத்துக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை முழு உலகிற்கும் பறைசாற்றும் ஓர் மாகாண சபைத் தேர்தலாக அமைப் போகின்றது. நாட்டுக்காக நீங்கள் நிறைவேற்றக்கூடிய கடமை என உணர்ந்து செயற்படுவீர்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.