பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

தாயகத்தில் பேரவலத்தில் சிக்கியிருக்கும் தங்கள் உறவுகளுக்கு துணையாக தாம் இருப்போம் எனும் உணர்வினை எழுச்சியுடன் வெளிப்படுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் பாரிஸ் நகரின் மனித உரிமைகள் மையமான Trocadero இல் நேற்று திங்கட்கிழமை (19.01.09) நடைபெற்றது.

கடும் மழை பெய்து அச்சுறுத்தியபோதும் மக்கள் ஒன்றுதிரண்டு வந்திருந்து ஈழத்தில் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தத்தினை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்தனர்.

அமெரிக்க மனித உரிமைப் போராளியான மாட்டின் லூதர்கிங்கின் நினைவு நாளில் அவரின் புகழ்பெற்ற வார்த்தையை தாங்கிய பதாகையுடன் தமிழ்மக்கள் ஒன்றுகூடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மிகக்குறுகிய காலத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் இந்த ஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்ட போதும் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டது மக்களின் மனவுறுதியை வெளிப்படுத்தியிருக்கின்றது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.