வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 இளைஞர்களை சுட்டுக்கொன்றபின் சடலங்கள் எரிப்பு

அநுராதபுரம் குடாதென்னங்கடவல பகுதியில் சம்பவம்

அநுராதபுரம், குடாதென்னங்கடவல பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனமொன்றில் கொண்டு வரப்பட்ட இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது சடலங்களும் எரியூட்டப்பட்டுள்ளன.

அநுராதபுரம் நகருக்கு வடமேற்கே நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் கம்பிரிகஸ்வௌ அளுத்கம கிராமங்களுக்கிடையிலிருக்கும் குடாதென்னங்கடவல சந்தியிலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொலிஸ் ஜீப் போன்ற ஒரு வாகனத்திலேயே இந்த இருவரும், பொலிஸ் மற்றும் ஊர்காவல் படையினரின் சோதனை நிலையங்களூடாகக் கொண்டுவரப்பட்டு இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் அவர்களை சுட்டுக்கொன்று விட்டு ஆயுதபாணிகள் இரு சடலங்களையும் எரியூட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நடமாட்டமும் மக்கள் குடியிருப்புகள் எதுவுமற்ற இந்தப் பகுதியில் வைத்துக் கொல்லப்பட்ட இருவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு பத்து மணியளவில் வயல் காவலுக்குச் சென்ற கிராமவாசிகள், இரு சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்து அதுபற்றி கிராமத்தவர்களுக்கு கூறியதுடன், அதுபற்றி பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளனர்.

எரியூட்டப்பட்ட இரு சடலங்களும் பெருமளவில் கருகிப் போயிருப்பதால் இறந்தவர்களை அடையாளம் காணமுடியாதிருப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரு இளைஞர்களையும் கொண்டு வந்த அந்த வாகனம் மீண்டும் அதே வழியால் பொலிஸ், ஊர்காவல் படை சோதனை நிலையங்களினூடாகவே சென்றுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அப் பகுதி மக்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

நேற்றுக் காலை சம்பவ இடத்திற்கு வந்த அநுராதபுரம் மாவட்ட நீதிபதி ருச்சிர வெலிவத்த விசாரணைகளை நடத்தியதுடன் பிரேத பரிசோதனைக்காக இரு சடலங்களையும் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் இறந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source & Thanks : /www.thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.