“நாம் அனைவரும் ஒன்றே’ என்ற வாசகத்துடன் ஒபாமாவின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்கள் ஆரம்பம்

“நாம் அனைவரும் ஒன்றே’ என்ற வாசகத்துடன் பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாக் கொண்டாட்டங்கள் வாஷிங்டனிலுள்ள லிங்கன் நினைவாலயத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள பராக் ஒபாமா அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் எனத் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற கூட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கெதிராக இரு நாடுகளில் நடைபெற்றுவரும் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களை அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நிலையில் இக் கடினமான சவால்களை எதிர்காலத்தில் அமெரிக்கா வெற்றிகொள்ளுமென்பதில் தான் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பதவியேற்பை முன்னிட்டு ஒபாமாவை வரவேற்கும் முகமாக வாஷிங்டனிலிருந்த லிங்கன் நினைவாலயத்தில் மிகப்பெரிய நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நாட்டின் மிகப்பெரிய இசைக் குழுக்களும் பங்குபற்றியிருந்தன. இங்கு ஒபாமா மேலும் உரையாற்றுகையில்;

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறிது காலம் எடுக்கும். இதற்கான பாதை நீண்டதும் செங்குத்தானதுமாகும். அளவிட முடியாத சவால்கள் எமக்கு முன்னால் உள்ளன. எமது முன்னோர்களின் கனவு எமது காலத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா நீடித்து நிலைத்து நிற்குமென்ற நம்பிக்கையுடன் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.

எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை தற்போதைய விட உயர்ந்ததொரு தரத்தில் இருக்குமென்பதற்கு என்ன உறுதி வழங்கப்பட்டிருக்கிறதென வெவ்வேறுபட்ட சமூகத்தினர்களிலிருந்து வந்த ஆண்களும் பெண்களும் கேள்வியெழுப்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் அனைவரும் ஒன்றே எனக் கூறி உரையை நிறைவு செய்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு நிகழ்வை முன்னிட்டு முன்னெப்போதுமில்லாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இந்நிகழ்வில் சுமார் 20 இலட்சம் பேர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வை நேரடியாகப் பார்வையிடுவதற்காக 240,000 அனுமதிச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் கிடைக்காதவர்கள் லிங்கன் நினைவாலயத்திலிருந்து வாஷிங்டன் வரையான 2 கி.மீ. வீதியில் நின்று நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக முதன்முறையாக இவ்வீதி பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அத்துடன், சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங்கின் நினைவு தினம் நேற்று அங்கு அனுஷ்டிக்கப்பட்டது.

பதவியேற்பை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி ஜோபைடனின் குடும்பத்தவர்களும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : www.thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.