சத்யம்: நியூயார்க் டைம்ஸ் வெளியிடும் உண்மைகள்!

நியூயார்க்: ‘சத்யம் நிறுவன கணக்குகளில் காட்டப்பட்ட மொத்தப் பணமும் அந்நிறுவனம் உண்மையில் சம்பாதித்ததுதான். அதை தனது வேறு தொழில்களுக்கு ராமலிங்க ராஜூ திருப்பிவிட்டிருக்கலாம்’ என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு செய்த மோசடி குறித்த புதிய தகவல்களை நியூயார்க் டைம்ஸ் நாளேடு நேற்று வெளியிட்டுள்ளது.

‘ராமலிங்க ராஜு கூறியது போல் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபம் செயற்கையாக உயர்த்தப்பட வில்லை. லாபமாக கிடைத்த தொகை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம். இதை ராஜு சுருட்டிவிட்டிருப்பார்’ என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தனது சிறப்புக் கட்டுரையில் கூறியுள்ளது.

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமாக திகழ்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு கடந்த 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நிறுவனத்தின் லாபத்தை கடந்த சில ஆண்டுகளாகவே தாம் செயற்கையாக உயர்த்தி வந்ததாகவும், இதனால் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரொக்க கையிருப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தனது மோசடியை ஒப்புக் கொண்டு பதவி விலகிய ராஜு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்று போலீசார் அவரை விசாரணைக்காக தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ராஜு கூறியது போல் லாபம் செயற்கையாக உயர்த்தப்படவில்லை என்றும், லாபமாக கிடைத்த பணம் முழுவதையும் ராஜு வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டதாகவும், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சத்யம் இயக்குனர் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் ராஜு கூறியிருந்ததற்கும் தற்போது விசாரணையில் தெரியவரும் தகவல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் அந்த நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

சத்யம் நிறுவனத்திலிருந்து தானோ தனது சகோதரர் ராமராஜுவோ ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று ராமலிங்க ராஜு கூறியிருப்பதும் உண்மைக்கு மாறானது என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.