சென்னை to கோவை புல்லட் ரயில்: லாலு யாதவ்

டெல்லி: இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூருக்கு புல்லட் ரெயில் செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


இந்தியாவில் சரக்கு ரயில்களுக்கான தனியான வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் சென்றார். இவருடன் ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலுவும் சென்றார்.

தலைநகர் டோக்கியோவில் இருந்து கியோட்டோ நகருக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பயணம் செய்த லாலு பிரசாத், இந்தியாவிலும் அதை செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து சிங்கப்பூர் சென்ற லாலு, அங்கு லீ குவான் யிவ் கல்வி நிறுவனத்தின் கல்வி நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் திட்டம் மூலம் இணைக்கப்படும் என்றார்.

நேற்று நாடு திரும்பிய லாலு டெல்லியில் அளித்த பேட்டியில்,

இந்தியாவின் முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் திட்டம் மூலம் இணைக்கப்படும். புல்லட் ரயில் அனுபவம் நன்றாக இருந்தது. இது இந்தியாவில் விரைவில் செயல்படுத்தப்படும். டெல்லி-சண்டீகருக்கு இடையே புல்லட் ரயில் அறிமுகப்படுத்துவதற்காக சர்வதேச ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்க இருக்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் புல்லட் ரயில் ஓட வேண்டும்.

மும்பை-அகமதாபாத், டெல்லி-சண்டீகர், டெல்லி-பாட்னா ஆகிய நகரங்களுக்கு இடையே முதல் கட்டமாக புல்லட் ரயில் இயக்கப்படும்.

பின்னர் புல்லட் ரயில் திட்டம் சென்னை-பெங்களூர்-கோவை, சென்னை-விஜயவாடா-ஐதராபாத், புனே-மும்பை-அகமதாபாத் மற்றும் கௌரா-ஹால்தியா ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இயக்கப்படும் என்றார் லாலு பிரசாத்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.