தாக்குதல்கள் தொடரும்: நிபுணர் எச்சரிக்கை

நியூயார்க் 19 : மும்பையில் நடத்தப்பட்டது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவில் மீண்டும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும், இவற்றை இந்தியாவாலோ அல்லது அமெரிக்காவாலோ இப்போதைக்கு தடுத்து நிறுத்த இயலாது என்றும், அமெரிக்காவில் உள்ள ராண்ட் நிறுவனத்தில் மூத்த அரசியல் விஞ்ஞானியாக உள்ள ஏஞ்சல் ரபாசா கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்டது போன்ற உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டது போன்ற இடங்களே எதிர்காலத்தில் குறிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் என்பதால் ராணுவ ரீதியிலான நடவடிக்கை பேராபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள அவர், எனினும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுக்காமல் இருந்தால் அது இந்தியாவுக்கு திறமையில்லை, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள சக்தியில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளார்.

ஏஞ்சல் ரபாசாவுடன், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் இணைந்து நடத்திய ஆய்வைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Source & Thanks : maalaisudar.com

Leave a Reply

Your email address will not be published.