லஷ்கர் புது நிபந்தனை

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச சமுதாயம் தலையிட்டு விடுதலை பெற்றுத் தர முன்வந்தால் ஜிஹாத்தை கைவிட தயார் என்றும் தீவிரவாத பயிற்சி முகாமும் கலைக்கப்படும் என்றும் லஷ்கர்இ தொய்பா கூறியுள்ளது.

காஷ்மீரில் நடைபெறும் மோதலுக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கி செயல்பட வேண்டுமென்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தீவிரவாத அமைப்பான லஷ்கர்இ தொய்பாவின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா கஸ்னவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் பிரச்சனையால் நாங்கள் எழுப்பும் வேதனைக்குரலை கேட்டு சர்வதேச சமுதாயம் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வரும்பட்சத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. தீவிரவாத பயிற்சி முகாமையும் கலைத்துவிடுவோம்.

எங்களுடைய போராட்டம் காஷ்மீருக்காக மட்டுமே. உலகில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உலகளாவிய செயல் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை.

காஷ்மீர் விடுதலைப்பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய விருப்பம். இது அமைதியான முறையில் நிறைவேறும் பட்சத்தில் அதனை நாங்கள் வரவேற்போம். எங்கள் குறிக்கோளை அடைய ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வு என்று நாங்கள் கருதவில்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்த போது காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதை பிரிட்டன் செயல்படுத்தவில்லை. அன்றைய பிரிட்டிஷ் அரசு செய்த தவறால் இன்றைக்கு காஷ்மீர் மக்கள் தொல்லைக்கு ஆளாகி இருக்கி றார்கள். அவர்களின் விடுதலைக் காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று நாற்பது ஆண்டுகளாக நாங்கள் விடுத்த கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளாததால் எங்களுடைய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என கஸ்னவி கூறியுள்ளார்.

Source & Thanks : maalaisudar.com

Leave a Reply

Your email address will not be published.