கஸாப்பின் டி.என்.ஏ ஆதாரம் பாக்.கிடம் வழங்குகிறது இந்தியா

டெல்லி: மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தி சிக்கியமுகம்மது அஜ்மல் கஸாப்பின் டி.என்.ஏ சோதனை குறித்த விவரங்களை பாகிஸ்தானிடம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

மும்பை சம்பவம் தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்த ஆதாரங்களை போதிய தகவல் இல்லை, விவரம் இல்லை, இது வெறும் தகவல்கள்தான் என்று சால்ஜாப்பு கூறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். முழுமையான ஆதாரங்களை ஏற்காமல் அரை குறையாக ஏற்றுள்ளது.

இந்த நிலையில், முக்கிய ஆதாரங்கள் அடங்கிய 2வது ஆதாரப் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கவுள்ளது. இதில், கஸாப்பிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை குறித்த விவரங்களும் இடம் பெறவுள்ளன.

இதன் மூலம் கஸாப்பின் தாயகம் குறித்து பாகிஸ்தான் கூறிக் கொண்டிருக்கும் மழுப்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. இந்த ஆதாரத்தை பாகிஸ்தானால் கண்டிப்பாக மறுக்க முடியாது என்றும் இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த 2வது ஆதாரப் பட்டியல் மூலம் மும்பை சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானை விரைவாக செயல்பட வலியுறுத்த முடியும் எனவும் இந்தியா நம்புகிறது.

இந்தியாவின் 2வது ஆதாரப் பட்டியலில் லஷ்கர் இ தொய்பா தலைவர்களான ஜாகி உர் ரஹ்மான் லக்வி, ஜரார் ஷா ஆகியோருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சு விவரங்கள், அவர்கள் தீவிரவாத செயலுக்கு திட்டமிட்டது, பயிற்சி அளித்தது உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறவுள்ளனவாம்.

ஜனவரி 5ம் தேதி இந்தியாவின் முதல் ஆதாரப் பட்டியல் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

2வது ஆதாரப் பட்டியலை பாகிஸ்தானிடம் வழங்கிய பின்னர், தான் கோரும் தீவிரவாதிகளை விரைவில் ஒப்படைக்குமாறும், தீவிரவாத முகாம்களை ஒழிக்குமாறும், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பாகிஸ்தானை இந்தியா தீவிரமாக நெருக்க திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் சரியான முறையில் செயல்படாவிட்டால் அதனுடனான வர்த்தகம், போக்குவரத்து உறவுகளைத் துண்டிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை ஏற்கனவே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிததுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

நேரடியாக போர் புரிவதை விட இதுபோன்ற ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளால் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.