முழு நாடும் ஆயுதமுனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கிறது: எஸ்.பி.திஸாநாயக்க

முழு நாடும் ஆயுத முனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சரும் மத்தியமாகாண ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டு வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதாக மெதமுலன ராஜபக்ஷ குடும்பம் தெரிவித்து வருகின்றது. நாட்டில் ஜனநாயகத்தைப்பாதுகாத்து நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டுமானால் அராஜகத்துக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மகிந்த ராஜபக்ஷவின் யுத்த சிந்தனை மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்கா சுட்டிக்காட்டினார்.

பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும் தீர்ப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக எஸ்.பி.திஸாநாயக்கா இரண்டு மாகாணங்களதும் மக்களுக்கு பொது வேண்டுகோளொன்றை விடுக்கும் கடிதமொன்றை வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிழக்குப் போன்று வடக்கிலும் ஜனநாயகத்தைப் பெற்றுத்தரப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சொல்கிறார் . ஆனால், தம்மை விமர்சிக்கும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அழித்து தென்னிலங்கையில் ஜனநாயகத்தை புதைக்கும் முயற்சியல் தீவிரம் காட்டிவரும் மெதமுலன ராஜபக்ஷ குடும்பம், எவ்வாறு ஆயுதமேந்திய வடக்குக்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்கப் போகின்றது என்று கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் எந்தவொரு மூலையிலாவது ஜனநாயகமோ, நல்லாட்சியோ காணப்படுகின்றதா? இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்தோ, இங்கிலாந்திடமோ இருந்துதான் ஜனநாயகத்தை கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் முந்திய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கட்டியெழுப்பினார்.

இன்றைய அரசு காட்டுவது போல் மத்திய வங்கி அறிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பொருளாதார வளர்ச்சியை அன்று ஒவ்வொரு கிராமத்து விவசாயியும் கூட நேரிடையாக அனுபவித்தனர். இன்று பொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கி அறிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையே காணக் கூடியதாகவுள்ளது.
அன்று பிரதமர் ரணில் முன் வைத்த “மீண்டெழும் இலங்கை” திட்டத்தின் மூலம் நாட்டுக்கு உலக நாடுகளிடமிருந்து பெருமளவிலான பொருளாதார உதவிகள் கிட்டின. அந்த உதவிகளை வைத்துக் கொண்டே மகிந்த ராஜபக்ஷ இன்று பொருமை பேசிக் கொண்டிருக்கிறார். வீராப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார். மகிந்த ஆட்சிக்கு வந்த பின்னர் இன்று வரையில் பொருளாதார உதவியென்று உலக நாடுகளெதுவும் ஒரு சதம் கூட வழங்க முன்வரவில்லை.

கடல்கோள் அனர்த்த நிவாரணத்துக்கு கிடைத்த வெளிநாட்டு உதவியை ஹெல்பிங் அம்பாந்தோட்டை வங்கிக் கணக்கிலிட்டுக் கொண்ட ஜனாதிபதி, இன்று ரணில் 2001 இல் நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொண்ட அனைத்து பொருளாதார உதவிகள், திட்டங்களை தெற்குக்கு மட்டும் என்ற கொள்கை அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றார்.

நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்தப் பேரழிவிலிருந்து மீட்சி பெற வேண்டுமானால், நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து நல்லாட்சி ஏற்படவேண்டுமானால் அதற்குரிய தீர்ப்பை மக்கள் தான் வழங்க வேண்டும். மத்திய மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் பெப்ரவரி 14 ஆம் திகதி மக்கள் அளிக்கும் தீர்ப்புத்தான் முழுநாட்டையும் அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக வழங்கப்படக்கூடிய ஆணையாகும். அந்த ஆணையை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் உறுதிபூண வேண்டும். இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுந்து விடாதீர்கள் என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.