ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி-அமைச்சரவை பரிந்துரை

டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து மாநில சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன், இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதையடுத்து அங்கு நெருக்கடி ஏற்பட்டது.

முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறி வந்தார் சோரன். ஆனால் காங்கிரஸ், லாலுபிரசாத் யாதவ் ஆகியோரின் நெருக்குதலைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிந்து விலகினார்.

இருப்பினும் சம்பை சோரன் என்பவரை முதல்வராக்க வேண்டும் என அவர் காங்கிரஸுக்கு நிபந்தனை விதித்தார். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதேபோல லாலு பிரசாத் யாதவும் சம்பையை முதல்வராக்க முடியாது என கூறி விட்டார்.

இதனால் புதிய முதல்வர் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என கட்சி மேலிடத்திற்கு ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பரிந்துரைத்தது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் துபே கூறுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டத்தி்ல இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஜார்க்கண்ட் சட்டசபையில் 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் யாரும் அங்கு ஆட்சி அமைக்க முடியாது.

இதேபோல பாஜகவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரி வந்தது. மாநில ஆளுநர் சையத் சிப்தே ரஸியையும் பாஜக தலைவர்கள் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமின்மைக்கு முடிவு கட்டும் வகையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய அரசுக்கு ஆளுநர் ரஸி பரிந்துரைக் கடிதம் அனுப்பினார்.

வெள்ளிக்கிழமையன்று இதுதொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை அவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தார். அதில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டசபையை முடக்கி வைக்கவும் பரிந்துரைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. சட்டசபையையும் முடக்கி வைக்க பரிந்துரைத்துள்ளது.

விரைவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

தற்போது சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ம் ஆண்டு ஜார்க்கண்ட்டில் தேர்தல் நடந்தது. அதன் பின்னர் 3 முதல்வர்கள் மாறி விட்டனர். முதலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அர்ஜூன் முன்டா முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலம் 17 மாதங்களே நீடித்தது.

பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏவான மது கோடா, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் 2 வருடங்கள் பதவி வகித்தார்.

அவரது தூக்கி விட்டுத்தான் சிபு சோரன் வந்தார். இப்போது அவரும் பதவி விலகி விட்ட நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

2000 – மாவது ஆண்டு நவம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாபுலால் மராண்டி முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.